Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 8 ஜூலை, 2013

அண்ணாவின் திட்டத்தை தடுக்க உச்சநீதிமன்றம் வரை செல்கிறார் ஜெயலலிதா : கருணாநிதி


 சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றினால் நமது எதிர்கால சந்ததியினருக்கு பலன் தரும் என்ற காரணத்தினால் இந்த திட்டம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., போராடி வருகிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி நாகையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூறினார்.

சேதுசமுத்திர திட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க.,தரப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாகப்பட்டினத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்; தமிழகத்தில் இந்த சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் நன்மைகள் ஏராளம் கிடைக்கும். இதன் மூலம் வாணிகம் பெருகும். வெளிநாடுகளில் தமிழக வியாபாரமும், தமிழகத்தில் வெளிநாட்டு வியாபாரமும் நடக்கும்.

ஒரு சிறிய பஞ்சாயத்துக்கு ஒரு திட்டம் வந்தாலே கவுன்சிலர் முதல் தலைவர்கள் என அனைவரும் வரவேற்பர். மகிழ்ச்சி அடைவர். ஆனால் மாநிலத்திற்கு நன்மை தரும் திட்டத்தை வேண்டாம் என்று தமிழக அரசு சொல்வது வேடிக்கையாக உள்ளது. அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள அம்மையார், அண்ணாவின் திட்டத்தை தடுக்க உச்சநீதிமன்றம் வரை செல்கிறார். இதைவிட இது போன்று துரோகத்தை யாராலும் அண்ணாவுக்கு செய்ய முடியாது. ஆனால் அண்ணாவின் பெயரில் கட்சி இருக்கிறது.

மீனவர்களுக்கு நன்மை தராது, மீன் வளம் பாதிக்கும் என தூண்டி விடப்படுகிறது. மீனவர்களுக்கு ஆபத்து இல்லை. செல்வம் கொழிக்கும், வளம் , வாய்ப்புகள் பெருகும். மீன் உற்பத்தி பெருகும். தமிழகம் வளர்ச்சி பெறும்.

சேது சமுத்திர திட்டம் கொண்ட வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல. இங்கு இருக்கும் கட்சி நிர்வாகிகளின் விருப்பம் அல்ல. அண்ணா விரும்பிய திட்டம். எம்.ஜி.ஆர் விரும்பிய திட்டம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பலன் கிடைக்கப்போவது எனக்கல்ல. எனக்கு 90 வயதாகிறது. வருங்கால சமுதாயம் வாழ வேண்டும் என நான் கனவு காண வேண்டாமா? இது தவறா? ஒரு கிழவன் ஒரு மாங்கொட்டையை மண்ணில் புதைத்து கொண்டிருந்தான். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள ஒருவன் என்னய்யா இது , எப்போது மரமாகி, காயாகி , பலன் தரப்போகுது ? என்று ஏளனமாக கேட்டானாம். இதற்கு இந்த கிழவன் சொன்னான். “ இப்போது நீ உண்ணுகிறாயே இந்த மாம்பழம், உனது தாத்தனும், பூட்டனும் விதைத்தது. இது போல இது இந்த மாங்கொட்டை மரமாகி, பழமாகி எதிர்கால சந்ததியினருக்கு பலன் தரும் இதனால் தான் நான் விதைக்கிறேன் ”என்றார். இது போல நமது எதிர்கால சந்ததியினர் வாழத்தான் சேதுசமுத்திர திட்டம் கொண்டு வரவேண்டும் என்கிறேன்.

எனது வாழ்நாளில் எத்தனையோ சாதித்துள்ளேன். நான் சாதித்து காட்ட வேண்டிய திட்டங்களில் சேது சமுத்திர திட்டமும் ஒன்று . இதற்கு என்னோடு அனைவரும் பாடுபட வேண்டும். பாடுபட வாருங்கள் என அழைக்கின்றேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக