வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகம் திக்குமுக்காடியது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஞ்சாயத்து யூனியனுகுட்பட்ட வேகுபட்டியில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு (சர்வே எண்:234/2) இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித்தொழில் செய்துவரும், 50 குடும்பத்தினர் குடிசைகள் அமைத்து, ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர். குடியிருப்புகளுக்கு பட்டா இல்லாததால், மின் இணைப்பு உள்ளிட்ட சலுகைகள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
நீர்நிலை புறம்போக்கு என்பதால் பட்டா வழங்க வருவாய்த்துறையினர் மறுத்து வருகின்றனர். நீர்நிலை புறம்போக்கு பகுதி என்பதை, நஞ்சை அல்லது தரிசு என வகைமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே, பட்டா வழங்குவதாக கூறியுள்ளனர்.இதையடுத்து நீர்நிலை புறம்போக்கு இடத்தை வகை மாற்றம் செய்வதற்காக, தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமாறு வேகுபட்டி பஞ்சாயத்து நிர்வாத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்து நிர்வாகம், தொடர்புடைய நீர்நிலை புறம்போக்கு இடத்தை தரிசு நிலமாக வகைமாற்றம் செய்து ஆணை பிறப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.மாதங்கள் பல கடந்தும் இதுவரை வகைமாற்றம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த வேகுபட்டி கிராம மக்கள், பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுபோன்று புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட சந்தைப் பேட்டையில் குடிசைகள் அமைத்து ஆண்டாண்டு காலமாக குடியிருந்து, துப்புரவுத்தொழில் செய்துவரும் குறவர் மற்றும் அருந்ததியினர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுடைய குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இவ்வாறு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வேகுபட்டி கிராம மக்கள் மற்றும் புதுக்கோட்டை நகர்ப்பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து முற்றுகையிட்டதால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் நேற்று திக்குமுக்காடியது. இவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனோகரன் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக