Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 28 ஜூன், 2013

தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

பதிவு மையங்கள்
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக, பொதுமக்களுக்கு உதவும் வகையில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வாக்காளர் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம் –6),

பெயர் நீக்கல் (படிவம் –7), பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்தல் (படிவம் –8), வாக்காளர் பட்டியலில் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் (படிவம் 8ஏ), குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம் –6ஏ), வாக்காளர் அட்டை நகல் பெறுதல் (படிவம் 001சி) ஆகிய 6 பணிகளை இந்த வாக்காளர் பதிவு மைய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் பதிவு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். அனைத்து கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களையும், வாக்காளர் பதிவு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் இந்த மையங்களிலேயே கொடுக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மனுதாரர் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், வயது மற்றும் குடியிருப்புக்கு ஆதாரமாக கல்வி சான்றுகள், பிறப்பு சான்று, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வருமான வரி கணக்கு அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அடையாள அட்டை போன்றவற்றையும் ஆதார ஆவணங்களாக பயன்படுத்தலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சி.சமயமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக