Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 3 ஜூன், 2013

வெள்ளத்தில் மிதக்கும் ஐரோப்பிய நாடுகள்

மத்திய ஐரோப்பிய நாடுகளில் தற்போது பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஜெர்மனி, செக்குடியரசு, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிவதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. எனவே, மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்த மழை வெள்ளத்துக்கு செக்குடியரசு மற்றும் ஜெர்மனி நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. செக் குடியரசில் உள்ள விடாவா ஏரி உடைந்தது. இதனால் கரை புரண்டோடும் வெள்ளம் பிராகு நகருக்குள் நுழைந்து சூழந்துள்ளது. டிராபெனிஸ் நகரில் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதுபோன்று பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெள்ளம் பாதித்த செக் குடியரசில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 200 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பீட்டர் நெகாஸ் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். இங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளப்பகுதிகளில் மீட்பு பணிகளை பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முடுக்கி விட்டுள்ளார். மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக