Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 9 மே, 2013

சென்ற இடமெல்லாம் மதிப்பை பெரும் மைக்ரோபயாலஜிஸ்டுகள் (MICRO-BIOLOGY)


பயோடெக் தொழில்துறையானது, பயாலஜி, சுற்றுச்சூழல் மற்றும் எகாலஜி ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடியதாய் உள்ளது. இத்துறை சார்ந்த படிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு, தொழில்துறை மற்றும் கார்பரேட் நிறுவனங்களில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.

இந்த 21ம் நூற்றாண்டில், மாணவர்கள் அதிகம்பேர் விரும்பி தேர்ந்தெடுக்கும் துறையாக மைக்ரோ பயாலஜி திகழ்கிறது. நமது வாழ்க்கையில், ஏறக்குறைய ஒவ்வொரு அம்சத்திலும், நுண்ணுயிர் என்பது, நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த உலகில் நம்மைச் சுற்றி பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பங்கிகள் மற்றும் புரோடோசோவா போன்றவை ஏராளமாக உள்ளன. அவைகளை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியாது.

மனித உடல், சமுத்திரங்களின் ஆழம், வெவ்வேறான காலநிலைக் கொண்ட பகுதிகள் மற்றும் மிருகங்களின் உடல் உள்ளிட்ட பல்வேறு வகையான இடங்களில் வாழும் நுண்ணுயிரிகள் மற்றும் மனிதனுக்கு அவற்றால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அவை மனித உடல்நலத்திற்கு செய்யும் தீமைகள் ஆகிய அனைத்து விஷயங்களைப் பற்றியும் மைக்ரோ பயாலஜிஸ்டுகள் படிக்கிறார்கள்.

ஒரு நுண்ணுயிரியால் தோற்றுவிக்கப்படும் நோயைப் போக்குவதற்கான ஆன்டிபயாடிக் மருந்து, அதே நுண்ணுயிரியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சில நுண்ணுயிரிகள் உணவு கெட்டுப் போவதற்கு காரணமாக இருக்கும் அதேநேரத்தில், சில, உணவை தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன. பிரட், கேக், ஒயின் மற்றும் யோகுர்ட் போன்ற பலவிதமான உணவுப்பொருட்களை, நுண்ணுயிரிகள் இல்லாமல் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையிலும் நுண்ணுயிரிகள் பயன்படுகின்றன.

படிப்பின் வகைகள்
மைக்ரோபயாலஜி என்பது, ஒரு வகைப்படுத்தி பிரிக்கப்பட்ட, இன்டர்டிசிப்ளினரி அறிவியல் படிப்பாகும். பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்தவர்கள், பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பில் சேர தகுதி பெறுகிறார்கள். இப்படிப்பு, நாடெங்கிலும் பல்வேறான கல்லூரிகளால் வழங்கப்படுகிறது. பலவிதமான பயோடெக் கார்பரேட் நிறுவனங்களில், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற, மருத்துவம், உணவு, தொழில்துறை மைக்ரோபயாலஜி மற்றும் மைக்ரோபியல் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒன்றில் ஸ்பெஷலைசேஷனுடன் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள்
இது தொடர்பான முதுநிலைப் படிப்பை பல கல்வி நிறுவனங்கள் வழங்கினாலும், அவற்றில், மும்பை, புனே மற்றும் கொல்கத்தா பல்கலைகள், பனாரஸ் இந்து பல்கலை, ஒடிசாவிலுள்ள வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலை, ஹரியானாவிலுள்ள வேளாண்மை பல்கலை, பாபேசாகிப் அம்பேத்கர் மரத்வாடா பல்கலை, சென்னைப் பல்கலை மற்றும் உஸ்மானியா பல்கலை போன்ற கல்வி நிறுவனங்கள் அவற்றுள் முக்கியமானவை.

பணி வாய்ப்புகள்
இன்றைய நிலையில், மைக்ரோபயாலஜிஸ்டுகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலுள்ள R&D ஆய்வகங்கள், அர்ப்பணிப்புள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், பார்மசூடிகல், உணவு, பானம் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் ஆகிய பல இடங்களில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். மேலும், வகைப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி(formulation research), பகுப்பாய்வு மேம்பாடு, கிளினிக்கல் ஆராய்ச்சி மற்றும் புதிய மருந்து கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம். இவைத்தவிர, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் கற்பிக்கும் வாய்ப்புகளும் மைக்ரோபயாலஜிஸ்டுகளுக்கு கிடைக்கின்றன. அதேசமயம், கல்லூரி அளவில் கற்பிக்க வேண்டுமெனில், நெட் தேர்வு தகுதியுடன் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், பிஎச்.டி தகுதியுள்ளவர்களுக்கு பல்கலைக்கழக அளவில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணி வாய்ப்புகள் குவிந்துள்ளன.

கற்பித்தல் பணியை விரும்பாத, அதேசமயம் நெட் தேர்வு தேர்ச்சி மற்றும் பிஎச்.டி தகுதிகளை வைத்திருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம் அல்லாத ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் தொழில்துறை, அரசு ஏஜென்சிகள் போன்றவைகளில் அதிக தேவை உள்ளது. தற்போதைய நிலையில், தகுதிவாய்ந்த மைக்ரோபயாலஜிஸ்டுகள் ஒன்று சேர்ந்து, தங்களின் சொந்த பரிசோதனை ஆய்வுக் கூடங்களை அமைத்துக் கொண்டுள்ளார்கள்.

சம்பளம்
தற்போதைய நிலையில், பயோடெக் துறையில் எதிர்பார்த்தளவு சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில், சிறப்பான சம்பளம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்போது, இத்துறையில், புதிதாக பி.எஸ்சி., முடித்தவர்கள் ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.10,000 என்ற அளவிலும், எம்.எஸ்சி., முடித்தவர்கள் ரூ.15,000 என்ற நிலையிலும், பிஎச்.டி., முடித்தவர்கள் ரூ.20,000 முதல் ரூ.25,000 என்ற நிலையிலும் பெறுகிறார்கள். சில ஆண்டுகள் அனுபவம் கிடைத்தவுடன், ஒருவரின் சம்பளம் பலமடங்கு அதிகரிக்கும்.

Food microbiology, Epidemiology of microbiological infections, Pharma and the cosmetics industry போன்ற துறைகளில், பயோடெக் தொழில் துறையானது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. Lactobacilli போன்றவைகளின் அதிக பயன்பாட்டினால், இத்துறையின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கிறது.

தொழில்ரீதியான நிபுணத்துவம் பெற்ற மைக்ரோபயாலஜிஸ்டுகளுக்கு, உணவு மற்றும் காஸ்மெடிக் துறைகள், பார்மா, பால்வளத் துறை,  Beer தயாரிப்பு, பரிசோதனை ஆய்வகங்கள், மருத்துவமனைகள், வேளாண் நிறுவனங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல் தொழில்துறை போன்ற எண்ணற்ற இடங்களில் பணிவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

மைக்ரோபயாலஜி என்பது நாளுக்குநாள் வளர்ந்துவரும் துறையாக இருப்பதால், இதன்மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இப்படிப்பை தயக்கமின்றி தேர்ந்தெடுத்துப் படிக்கவும். உங்களின் எதிர்காலம் ஏராளமான வாய்ப்புகளை நிச்சயம் கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக