நலிவடைந்த நிலையில் உள்ள 8 பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில்:
ஹெச்எம்டி வாட்சஸ், ஹெச்எம்டி சினர் வாட்சஸ், ஹெச்எம்டி பேரிங்ஸ், திரிவேணி ஸ்ட்ரக்சுரல்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் புராடக்ட்ஸ், என்.இ.பி.ஏ., ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் ஆகிய 8 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
எனவே, கனரக தொழில் துறையின் கீழ் இயங்கும் இந்த பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கான நிதியை திரட்ட முடியாத சூழல் உள்ளது. இதனால், இதன் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.
ஊழியர்களின் சம்பள பாக்கியை வழங்குவதற்காக நலிந்த நிறுவனங்களுக்கு அவ்வப்போது, திட்டமில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான சம்பள பாக்கியை வழங்குவதற்காக ரூ.81.92 கோடி வழங்க மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2012-13 நிதியாண்டில் கனரக தொழில் துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி ரூ.56,506 கோடியாக அதிகரித்துள்ளது. 2011-12இல் இது ரூ.56,009 கோடியாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக