அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்விக் கட்டணத்தை, அந்தந்த பள்ளிக்கு அரசு வழங்காததால், பள்ளிகள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், 7,000க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த, 2007 - 08க்கு முன் வரை, இப்பள்ளிகளில் கல்விக் கட்டணமாக, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், 32.50 ரூபாய், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், 47.50 ரூபாய், மேல்நிலைக் கல்வி வகுப்புகளில், 73 முதல், 273 ரூபாய் வரை, பிரிவுகளுக்கு ஏற்ப கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக நன்கொடை, 25 ரூபாய் வரை வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
பள்ளிகளில் வசூல் செய்யப்படும் இக்கட்டணங்களைக் கொண்டே, மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், எழுதுபொருள் செலவு மட்டுமின்றி, மாவட்ட அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி, கலை இலக்கிய விழா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வந்தனர். அரசு பள்ளிகளில் கட்டணம் என்ற பெயரில், பல மடங்கு அதிகமாக வசூல் செய்யும் நிலை, பல பள்ளிகளில் காணப்பட்டது. கட்டாய வசூல் மற்றும் அதிகப்படியான கட்டண வசூல் குறித்து, தமிழகம் முழுவதும் பரவலாக புகார் எழுந்தது. இதனால், தமிழக அரசு, 2007 - 08ம் கல்வியாண்டு மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளில் நன்கொடை வசூல் கட்டாயம் செய்யக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது. கல்விக் கட்டணத்தில் செய்து வந்த செலவுகளுக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை போக்கும் வகையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்விக் கட்டணத்தை தமிழக அரசே பள்ளிகளுக்கு திருப்பி வழங்கி வந்தது. நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையிலும், இதுவரை கல்விக் கட்டணத்தை, பள்ளிகளுக்கு தமிழக அரசு திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், அரசு பள்ளிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இதுகுறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: நன்கொடை வசூலிப்பதில் கெடுபிடி காட்டுவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதி நிலை, நல்ல நிலையில் இருப்பதில்லை. ஆனாலும், பள்ளிகளில் உள்ள, பராமரிப்பு செலவு, விளையாட்டு விழா, கலை இலக்கிய விழா என, அனைத்து செலவுகளுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழகமே செலவிட வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டு தேர்வின் போது, ஜெனரேட்டர் வாடகை எடுத்த பணம் கூட, ஓராண்டாகியும் வழங்கப்படாமல் உள்ளது. மாணவர்களின் கல்விக் கட்டணமும் ஓராண்டாகியும் திரும்ப வழங்கப்படவில்லை. அனைத்து பெற்றோர் ஆசிரியர் கழகங்களும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதே நிலை நீடித்தால், வரும் கல்வியாண்டு துவக்கத்திலேயே, அனைத்து அரசு பள்ளிகளும், மாணவர்களிடம் வசூல் வேட்டையில் இறங்க வேண்டிய கட்டாய நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக