பாஸ்போர்ட், ஓய்வூதியம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட, பொதுமக்களுக்கான சேவைகளை, குறித்த நேரத்தில் வழங்காமல், இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு, கடிவாளம் போடப்பட உள்ளது. சேவைகளை குறித்த நேரத்தில் வழங்காத அதிகாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.
பாஸ்போர்ட் பெற வேண்டுமானால், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு மாதக் கணக்கில் அலைய வேண்டும். தள்ளாத வயதில் ஓய்வூதியம் பெறச் செல்லும் பெரியவர்களுக்கு, குறித்த நேரத்தில், ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை. பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கு, வருவாய் துறை அலுவலகத்துக்கு, நடையாய் நடந்தாலும், அதிகாரிகளின் மனக் கதவுகள், திறக்கவே திறக்காது. "இன்று போய் நாளை வா' என்ற, ரெடிமேட் பதிலை, உதட்டின் மீது தேக்கி வைத்தபடி, பொதுமக்களை விரக்தியின் உச்சத்துக்கு தள்ளுவது, அதிகாரிகளுக்கு கை வந்த கலை. பொதுமக்களால், காலம் காலமாக கூறப்பட்டு வந்த, இந்த குறைகளுக்கு, விரைவில் விடிவு பிறக்க உள்ளது. "பொதுமக்களுக்கான சேவையை குறித்த நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யும் வகையிலான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதையடுத்து, மக்களுக்கான சேவைகள் மற்றும் பொருட்களை, குறித்த காலத்தில் வழங்கும் மற்றும் குறை தீர்க்கும் மசோதாவுக்கான வரைவை, மத்திய அரசு தயாரித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: பாஸ்போர்ட், ஒய்வூதியம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை, பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். எந்தெந்த சேவைகளை, பொருட்களை, எவ்வளவு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும், அவர்களின் குறைகளை கேட்பதற்கும், உதவி மையம், வாடிக்கையாளர் மையம், பொதுமக்கள் ஆதரவு மையம் போன்றவற்றை அமைக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கமிஷனை அமைக்க வேண்டும். இந்த கமிஷன்கள் மூலம், தங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என, பொதுமக்கள் கருதினால், கமிஷன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மத்தியில் செயல்படும் லோக்பால் அமைப்பு அல்லது மாநிலங்களில் செயல்படும் லோக்ஆயுக்தா அமைப்பு ஆகியவற்றில் முறையீடு செய்யலாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சேவைகளும், இந்த மசோதா வரம்பிற்குள் வரும். பொதுமக்களுக்கான சேவைகளை குறித்த நேரத்தில் வழங்காமல், தாமதிக்கும் அதிகாரிகளுக்கு, கடமையை செய்ய தவறியதற்காக, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது போன்ற முக்கிய அம்சங்கள், இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, இந்த மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக