Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 30 மார்ச், 2013

பொறியியல் மாணவர்களுக்கு இந்திய கலாசார பாடம்


 "தொழிற்கல்வி மாணவர்கள் தங்கள் படிப்புடன், இந்திய வரலாறு, சுதந்திர போராட்டம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், இந்திய கலாசாரம் குறித்த, பாடத்திட்டத்தை சேர்க்க உள்ளோம்" என டில்லி அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் மந்தா தெரிவித்தார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில் நுட்ப கல்லூரி, கட்டட கலை மற்றும் திட்டமிடும் கல்லூரி, அழகப்பா தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடந்தது.

பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு) தலைமை வகித்தார். விழாவில், முதலிடம் பிடித்த, 102 மாணவர்களுக்கு, தங்க பதக்கங்களையும், 4,513 மாணவர்களுக்கு, பட்டங்களையும் வழங்கி, டில்லி, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் மந்தா பேசியதாவது:

சர்வதேச போட்டிக்கு ஏற்ப, இளைஞர்களை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் உயர் கல்விக்கு உள்ளது. தொழிற்கல்வி, பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. அதே நேரத்தில், சமூகம் சார்ந்த அறிவு மிகவும் முக்கியமான ஒன்று.

ஒவ்வொரு இளைஞனும், தன் பொது அறிவை, உலக போட்டிக்கு ஏற்ப, வளர்த்து கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த, கல்வி அறிவை உருவாக்க வேண்டும். இல்லையேல், கல்வியால், எந்த பயனும் இல்லை.

நம்நாட்டில், தொழிற்கல்வியை, தனியார் நிறுவனங்களும், அரசும் அளித்து வருகின்றன. அரசு கல்வி நிலையங்கள், அரசு தரும் மானிய தொகையில் இயங்குகின்றன. தனியார் கல்வி நிலையங்கள், மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தை நம்பி உள்ளன. நிதியாதாரத்தை மேம்படுத்த, புதிய முயற்சிகளை அரசும், தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

போதிய நிதியாதாரம் இல்லாமல், உயர்கல்வியை மேம்படுத்த முடியாது. இப்பிரச்னைக்கு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், தீர்வு ஏற்படும் என, நம்புகிறோம். ஆசிரியர் பற்றாக்குறை, போதிய அடிப்படை வசதியின்மை இல்லாதது போன்றவை, உயர்கல்வித் தரத்தை வெகுவாக பாதித்துள்ளது. மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த விஷயத்தில், இந்தியா, உலக நாடுகளில் முன்னணியில் உள்ளது.

உயர் கல்வியில், இந்திய கலாசாரம் குறித்த, பாடத்திட்டத்தை சேர்க்க முடிவு செய்துள்ளோம். நாட்டின் வரலாறு, சுதந்திர போராட்டம் ஆகியவற்றை, இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. கலாசாரத்தை, வரலாற்றை அறிந்து கொள்வது அடிப்படை உரிமையாக உள்ளது.

இந்திய கலாசாரம் குறித்து, தனி பட்ட வகுப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு மந்தா பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக