தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜே.எல்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆசிரியர் தகுதி தேர்வு
தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது. கடந்த முறை நடந்த இந்த தேர்வில் குறைந்த அளவே ஆசிரியர்கள் தேர்வு பெற்றனர். அவர்கள், அரசு பள்ளிகளிலேயே பணியில் சேர்ந்து விடுகிறார்கள். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன.
எனவே ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மொத்த பணிக்காலத்தை கணக்கில் எடுத்து தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும்.
உண்ணாவிரதம்
அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ் ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது.
இந்த உண்ணாவிரத்துக்கு முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் டி.இ.எஸ்.நெய்னா முகமது, மாநில தலைவர் ஆராவமுதன், மாவட்ட தலைவர் அசன் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில உதவி பொதுச்செயலாளர் தாயப்பன் வரவேற்று பேசுகிறார்.
உண்ணாவிரதத்தை நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ் தொடங்கி வைக்கிறார். உண்ணாவிரதத்தில் முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் செய்யது அகமது கபீர், பொருளாளர் முகமது ஷாபி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுசெயலாளர் போத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மாநில உதவி பொதுச்செயலாளர் பி.தாயப்பன், துணை தலைவர்கள் எம்.கணேசன், எஸ்.சண்முகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக