குமரி மாவட்ட எஸ்.பி.,க்கு, தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியரை, போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்ட எஸ்.பி., மணிவண்ணனுக்கு,நேற்று முன்தினம் வந்த இ-மெயிலில், நாகர்கோவில், கன்னியாகுமரியில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அப்பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அடுத்த சிறிது நேரத்தில், மற்றொரு இ-மெயில் வந்தது. அதில், நாகர்கோவில் ஸ்டேட் பேங்க்கில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும், அது வெடிக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை தொடர்ந்து, டி.எஸ்.பி. ரத்னவேல் தலைமையில் போலீசார், ஸ்டேட் பேங்க் சென்றனர். ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியேற்றினர். மோப்பநாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள், வங்கி முழுவதும் சோதனை செய்தனர். எனினும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்தவர் பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இ-மெயில், மொபைல் போன் மூலம் வந்துள்ளதை, சைபர் கிரைம் போலீசார் கண்டு பிடித்தனர். பின், பூதப்பாண்டி அருகே, அழகியபாண்டிபுரம் டவரில் இருந்து வந்துள்ளதை உறுதி செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை, உடனடியாக கைது செய்தனர்.
விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் செண்பகராஜ், 22, என்றும், கம்ப்யூட்டர் இன்ஜினியரான, இவர் நண்பரை சிக்க வைக்க, அவரது இ-மெயில் முகவரியில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளதாக, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவரிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக