திறமைவாய்ந்த ஆசிரியர்களும் சிறந்த நிர்வாகத் திறன் மிக்கவர்களும் இல்லாததால் உலக அளவில் முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெறவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்திருக்கிறார்.
உத்தராகண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் முதலாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் குறித்து கவலை தெரிவித்தார். அவர் பேசியது:
நமது நாட்டின் தேவைகளை தற்போது இருக்கும் மேலாண்மை நிபுணர்களால் நிறைவேற்ற முடியாது. உலகின் மிகச் சிறந்த நிர்வாகத் திறனுடன் போட்டியிட இந்திய தொழிலகங்கள் தயாராக வேண்டுமானால் அதற்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் திட்டமிட வேண்டும். இந்திய தொழிலகங்கள் சர்வதேச தரத்தில் செயல்படும் விதத்தில் வளர்ச்சி அடைய வேண்டுமானால் நிர்வாகத் திறன் மிக்கவர்கள் தேவை. துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் அது போன்றவர்களின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை. 2006-2007-ஆம் ஆண்டில் வணிகம் மற்றும் நிர்வாக இயல் படிப்பவர்களின் எண்ணிக்கை 23 லட்சமாக இருந்தது. 2011-2012ஆம் ஆண்டில் இது 34 லட்சமாக அதிகரித்தது. ஆனால் இந்த பாடப்பிரிவுகளில் பட்டதாரிகளும் உயர்கல்வி பயின்றவர்களும் மேலும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார, தொழிலக வளர்ச்சிக்கு ஏற்ற கல்வித் திறன் மிக்கவர்களை நாம் உருவாக்க இயலும்.
பல்கலைக்கழகங்களில் புதிய முயற்சிகள், கண்டுபிடிப்புகள் அதிகரிப்பதுதான் நமது வளர்ச்சிக்கு உதவும். 2012-ஆம் ஆண்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 42 ஆயிரம். அமெரிக்காவிலும் சீனாவிலும் காப்புரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஆறு லட்சமாகும். கூட்டு முயற்சியில் செய்யப்படும் கல்வி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தர வேண்டும். ஆராய்ச்சி செய்வதற்கான உதவிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்தியா மிக உன்னதமான நிலையை அடைகின்ற திருப்புமுனை கட்டத்தில் உள்ளது. இங்கு பல சவால்கள் உள்ளன. அதே சமயம் வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன.
2020-ஆம் ஆண்டில் இந்திய பிரஜையின் சராசரி வயது 29 ஆக இருக்கும். அதே நேரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் இளைஞர்களின் சராசரி வயது 37 ஆகவும், மேற்கு ஐரோப்பாவில் 45 ஆகவும், ஜப்பானில் 48 ஆகவும் இருக்கும். உலக அளவில் போட்டியிட நமது இளைஞர்கள் தயாராக வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக