தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வுகளிலும் பொது அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் குரூப்–4 தேர்வில் மொழிப்பாடத்தில் (தமிழ் அல்லது ஆங்கிலம்) கேள்விகளின் எண்ணிக்கை 100–லிருந்து 50 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக பொதுவிழிப்புணர்வு திறன் (ஆப்டிடியூட்) பகுதியை சேர்த்துள்ளனர். இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.
இணையதளத்தில் வெளியீடு
முன்பு அறிவிக்கப்பட்டபடி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), சார்–பதிவாளர் (கிரேடு–2), துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பதவிகள் முன்பு போல குரூப்–2 தேர்வில்தான் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்–2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு மட்டும் முதல்நிலைத்தேர்வுடன் கூடுதலாக மெயின் தேர்வு (ஆப்ஜெக்டிவ் முறை) நடத்தப்படும்.
அனைத்து தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டமும் தேர்வுமுறையும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இன்று இரவு வெளியிடப்பட்டது.
புதிய தலைவர் பொறுப்பேற்பு
இதற்கிடையே, டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள ஏ.நவநீதகிருஷ்ணன் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவரிடம் தற்போதைய தலைவரான ஆர்.நட்ராஜ் பொறுப்புகளை ஒப்படைப்பார். இந்த நிகழ்ச்சியில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, பணியாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக