தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 8½ லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
8½ லட்சம் பேர்
பிளஸ்–2 தேர்வு (வெள்ளிக்கிழமை) தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5,769 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 பேர் மாணவிகள். அதாவது மாணவர்களை விட 56 ஆயிரத்து 958 மாணவிகள் கூடுதலாக தேர்வில் கலந்துகொள்கிறார்கள். இதற்காக 2020 தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை மாநகரில் 406 பள்ளிகளில் இருந்து 51 ஆயிரத்து 531 பேர் 140 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 23 ஆயிரத்து 717 பேர். மாணவிகள் 27 ஆயிரத்து 814 பேர் ஆவர். புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 919 மாணவிகள் உள்பட 12 ஆயிரத்து 611 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். பள்ளி மாணவர்களைத்தவிர, தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை
கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் உள்பட இதர மாற்றுத்திறனாளிகளுக்கான சொல்வதை எழுதுபவர் ஆகியோருக்கு தேர்வில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேர்வுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும். மேலும் ஒரு மொழிப்பாடம் கிடையாது.
தேர்வுக்கான வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைந்துள்ளதா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து அமைக்கப்பட்டு இருக்கின்றன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வினாத்தாள் காப்பு மையங்களிலும் கூடுதல் கண்காணிப்புக்கு இரவு காவலர்கள் பணியாற்றுவார்கள். ஆய்வு அதிகாரிகள் அடிக்கடி மையங்களுக்கு சென்று கண்காணிப்பார்கள்.
மின்வெட்டை சமாளிக்க ஜெனரேட்டர் வசதி
தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும் முன்னேற்பாடாக ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் நல்ல முறையில் செய்யவும் பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் போலீஸ் எஸ்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி, சப்–கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். தேர்வுக்குழுவினர் தேர்வு மையங்களை பார்வையிட்டு முறைகேடுகள், எதுவும் நடைபெறா வண்ணம் கண்காணிப்பார்கள்.
பறக்கும் படைகள்
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்களும் மாவட்டங்களில் தேர்வு நாட்களில் கண்காணிப்பு குழுக்களுடன் தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவார்கள். தேர்வு மையங்களை பார்வையிட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். ஒருசில மையங்களில் கண்காணிப்புக்குழுவினர் தேர்வு தொடங்கி முடியும் வரை அங்கேயே தங்கி தேர்வு பணிகளை பார்வையிடுவார்கள்.
தொழிற்படிப்பு சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய 6 பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 11, 14, 18, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. அந்த தேர்வுகளின்போது, அனைத்து தேர்வு மையங்களிலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வை நடத்துவார்கள். மேலும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிறப்பு பார்வையாளர்களாக தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள்.
காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை
எக்காரணம் கொண்டும் தேர்வு நேரத்தின்போது அந்த பள்ளியைச்சேர்ந்த தாளாளர்களோ, ஆசிரியர்களோ, பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது. தேர்வின்போது காப்பி அடித்தல், பிட் அடித்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்தகொள்ளல், விடைத்தாள் மாற்றல் செய்தல், ஆள்மாறாட்டம் செய்வது ஆகிய செயல்பாடுகள் ஒழுங்கீனமாக கருதப்பட்டு, அத்தகை செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமுறைகளின்படி உரிய தண்டனை வழங்கப்படும்.
ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையம் ரத்துசெய்யவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வர்களின் போட்டோக்கள் பெயர் பட்டியலிலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலும் அச்சிடப்பட்டு உள்ளது.
சிறுபான்மை மொழிகளில் வினாத்தாள்
தமிழ்வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 5 லட்சத்து 59 ஆயிரத்து 964 மாணவ–மாணவிகள் தமிழ்வழியில் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் பகுதி–3–ல் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களையும் தமிழ்வழியோடு ஆங்கிலவழி வினாக்களும் ஒரே வினாத்தாளில் இடம்பெறும் வண்ணம் இருமொழி வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படும். அந்த வினாத்தாள்களில் ஆங்கிலவழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.
40 கைதிகள்
ஜெயில் கைதிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிடும் வகையில் ஜெயிலிலே கடந்த சில ஆண்டுகளாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வுக்கு சென்னை புழல் ஜெயிலில் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டு அங்கு 40 கைதிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
இவ்வாறு வசுந்தராதேவி கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக