நாட்டில், உயர் தரத்துடன் உயர் கல்வியை, குழந்தைகளுக்கு அளிக்கும் வகையில், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது என்றும், உயர் கல்வி நிறுவனங்களில், பேராசிரியர் பணியிடங்கள், 30 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ கூறினார்.
கொச்சியில், விழா ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: நமக்கு இப்போது தேவை, தரமான கல்வி. குழந்தைகளுக்கு தரமான உயர் கல்வி கிடைக்கும் வகையில், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தப்படுகிறது. உயர் கல்வி நிறுவனங்களில், பேராசிரியர் பணியிடங்கள், 30 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. இதை பலப்படுத்துவது அவசியமாகிறது.
இந்தியாவில், 55 கோடி இளைஞர்கள், 24 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இது இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு. இவர்கள், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்கும் வகையில், பார்லிமென்டில் மசோதா கொண்டு வர முயற்சித்தும், நிறைவேறாமல் தள்ளிப் போய் கொண்டுள்ளது. வரும் பட்ஜெட் தொடரில், இந்த மசோதா கண்டிப்பாக கொண்டு வரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக