தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி.,நிறுவனங்கள் தொழில் துவங்க, அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு முடங்கியுள்ளது.
தமிழகத்தில், 48 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், ஐ.டி.,க்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 17. இவற்றில் தொழில் துவங்க, சர்வதேச நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் துவங்கவில்லை. இன்டெல், விப்ரோ போன்ற நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இடம் ஒதுக்கி, 4 ஆண்டுகள் ஆகி, கட்டடம் கட்டி ஓராண்டாகி விட்டது. ஆனால் தொழில் துவங்காமல், முடங்கி கிடக்கின்றன.
இதற்கு அரசு துறைகளில், அனுமதியை பெறுவதில் உள்ள முறையே காரணம். ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனுமதி, தொழில் துறை மூலம் வழங்கப்படுகிறது. இங்கு காலதாமதம் ஆவதால், "எல்காட்' மூலம் வழங்க வேண்டும் என, ஐ.டி., கூட்டமைப்பினர் கோரி வருகின்றனர்.
ஐ.டி.,நிறுவனம் தொழில் துவங்க, உள்ளாட்சி, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு அரசுத்துறைகளில், 40 அனுமதி பெற வேண்டியுள்ளது. பிற மாநிலங்களில் இல்லாத (10 சதவீத இடத்தை திறந்தவெளியாக ஒதுக்க வலியுறுத்தும்) நடைமுறையை தமிழகத்தில் பின்பற்ற வேண்டாம் என மத்திய வர்த்தகத்துறை செயலர், தலைமைச்செயலருக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஒப்புதல் வழங்கியும், வீட்டுவசதித்துறையின் ஒரு அதிகாரியால் இதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.
தொழில் சட்டத்தில் சில திருத்தங்களை செய்தாலே, ஐ.டி.,நிறுவனங்களுக்கான அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் பெறலாம். மதுரை ஐ.டி.,பார்க் கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டிற்கு மேலாகியும் செயல்படவில்லை. இங்கு மின்வாரியத்திற்கு மட்டும் மாதம் ரூ.17 லட்சம் கட்ட வேண்டியுள்ளது.
நெல்லை ஐ.டி.,பார்க் பராமரிப்பின்றி உள்ளது. தொழில் துறையில் முன்னேற "விஷன் 2023' என முதல்வர் அறிவிக்கிறார். ஆனால் அதிகாரிகளின் செயல்பாடுகளால், நிறுவனங்களை துவக்க இயலாமல், ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு முடங்கி கிடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக