இந்திய விமானப்படையின் 25-வது படைப்பிரிவு மற்றும் 33-வது படைப்பிரிவு தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவையட்டி இரு படையினருக்கும் உயரிய விருதான ஜனாதிபதி தர விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை சூலூரில் உள்ள விமானப்படை மைதா னத்தில் இன்று நடந்தது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு இரு படைப்பிரிவினருக்கும் விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடி மற்றும் விமானப்படையின் கொடிகளை ஏந்தியபடி பறந்தன.
அதைத் தொடர்ந்து விருது களை வழங்கி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-
இந்தியாவின் பாரம்பரியமிக்க ராணுவத்தில் இந்திய விமானப்படையின் பங்கு மகத்தானது. சுய நலமில்லாத சேவையை இந்த நாட்டிற்காக விமானப்படை செய்து வருகிறது. 80 ஆண்டு சரித்திரத்தில் பல்வேறு நெருக்கடியான காலத்தில் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்ததோடு முன் னேற்றத்துக்காகவும் பெரும் பங்காற்றி வருகிறது. போர்க் காலங்களில் மட்டுமல்லாமல் இயற்கை சீற்றங்களின் போதும் மக்களைப் பாதுகாக்கும் பணியையும் இந்திய விமானப்படை செய்து வருகிறது.
உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நமது விமானப்படை பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட புயலின்போதும், 2008-ல் சீனாவில் ஏற்பட்ட பூகம் பத்தின் போதும் இந்திய விமானப்படை தனது பங்களிப்பை செய்துள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அமைதியை விரும்புவது தான். இதில் நமது விமானப்படை உறுதியோடு தனது அர்ப்பணிப்பை செய்து வருகிறது. தற்போது உயர்ந்த விருதான தர விருது பெற்றுள்ள 25 மற்றும் 33-வது படைப்பிரிவினர் 1965, 71-ல் நடந்த போரின் போது மிகப்பெரிய சேவையை செய்துள்ளனர். தற்போது படைப்பிரிவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள மகத்தான பணிக்கு இந்த நேரத்தில் நாம் நன்றி செலுத்துகிறோம்.
இந்தியா அமைதியைத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் தேச நலனுக்கு இடையூறு ஏற்பட்டால் அதனை சந்திக்கவும் தயாராக உள்ளோம். ஐக்கியநாடு சபை பாதுகாப்பு குழுவில் நமது நாடும் இடம் பெற்றிருப்பது நமது திறமைக்கு கிடைத்த சான்று.இந்திய விமானப்படை பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக