"கல்வி என்பது வகுப்பறைகளில், புத்தகங்களை பயில்வது மட்டுமல்ல; ஆளுமைத்திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்" என தமிழக கவர்னர் ரோசய்யா பேசினார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 51ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் கேப்டன் சந்தீப் சக்கரவர்த்தி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
விழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா பேசியதாவது: ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றுவதற்குரிய அடித்தளத்தை உருவாக்குவதுடன்; நாட்டை காப்பாற்ற, வெளிநாட்டவர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.
ராணுவம் நம் நாட்டின் பெருமைக்குரிய அடையாளம். இதை உங்களிடம் பார்க்கிறேன். அணிவகுப்பு மரியாதை மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. கல்வி என்பது வகுப்பறைகளில், புத்தகங்களை பயில்வது மட்டுமல்ல; ஆளுமைத் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
நல்ல பள்ளி என்பது என்பது மாணவர்களை நல்ல வழியில், சரியான திசையில் வழிகாட்டி செல்வதேயாகும். தேசிய பாதுகாப்பு கழகத்திற்கு 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பியதில், 24 சைனிக் பள்ளிகளில், நான்கு பள்ளிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. அதில், அமராவதி நகர் சைனிக் பள்ளியும் ஒன்று.
கடந்த 50 ஆண்டுகளில், 500 மாணவர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளனர். மாணவர்கள் லட்சியத்தை வகுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு கவர்னர் ரோசய்யா பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக