ஸாரே ஜஹான்ஸே அச்சா இந்துஸ்தான் ஹமாரா - (உலகிலேயே சிறந்தது, இந்தியா, எங்கள் நாடு) - இந்தப் பாடலை வழங்கிய மகாகவி முகமது இக்பால் அவர்களின் மறைவு 1938 நவம்பர் 9 ஆம் நாளில் ஏற்பட்டது என்பது வரலாறு.
இன்றைக்கு அவரின் மறைவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், அவர் தந்துவிட்டுப் போன பாடல், இன்றைய சுதந்திர இந்தியாவில் இராணுவத்தினரை இதயங்களால் இணைக்கும் பாடலாகப் பாடப்படுகிறது.
மகாகவி முகமது இக்பால் அவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து பிரிட்டிஷ் இந்தியாவில் மறைவை எய்தியவர். இந்திய தேசம் எல்லா மதங்களின் சங்கமம்; அனைத்துக் கலாசாரங்களின் கலவை; எல்லா வகுப்புகளின் கூட்டமைப்பு. இதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும்! அதற்கு முன்னோடித் திட்டமாக, இந்திய மக்கள், தங்களின் இதயங்களின் ஒற்றுமை உணர்வை உருவாக்க வேண்டும் என்று முதன் முதலில் பாடிய பேரறிஞர் முகமது இக்பால் அவர்களே ஆவார்கள்.
ஸாரே ஜஹான் ஸே அச்சா - என்னும் இந்தப் பாடல், பிரிட்டிஷ் இந்தியாவில் எல்லா மத; சாதி, வகுப்பு மக்களாலும் பாடப் பெற்றது. இந்தப் பாடலை ஒரு ரயில் பயணத்தின்போது, ஒரு பிச்சைக்காரன் பாடுவதைக் கேட்டுச் சுவைத்த சுப்பிரமணிய பாரதியார், இந்தப் பாடலின் பொருளைத் தழுவியே, ‘பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு’ என்று பாடினார் என்பதும் வரலாற்றில் வந்துள்ள செய்திதான். மகாகவி இக்பால் அவர்கள், கஷ்மீர் பிராமணர்களின் பூர்வீகத்தில் இருந்தவர்; அவரின் முன்னோர் முஸ்லிம் ஆனார்கள். பண்டித நேரு குடும்பம், கஷ்மீர் சிங்கம் என்று போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாஹ் குடும்பம் எல்லாமே கஷ்மீர் பிராமணர் பாரம்பரியமே ஆகும். அதே வழிவாற்றில் வந்தவர்தான் முகமது இக்பால்.
அவரின் உர்தூ, பார்ஸி கவிதைகள் உலகப் புகழ்பெற்றவை. அவர் ஹிந்தி, கஷ்மீரி, சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளில் வல்லுநராக விளங்கியவர். உலக மொழியான ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மனி போன்றவற்றில் மிகுந்த ஆற்றல் பெற்றிருந் தார். திருக்குர்ஆன் முழுவதையும் படித்து, ஆய்ந்து, அதன் சாற்றையே தன்னின் வாழ்வாகக் கொண்டு வாழ்ந்த காரணத்தால், இக்பால், குர்ஆனின் குரலாகப் போற்றப்பட்டார்.
பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், இன்றளவும் இக்பாலின் கவிதைகளைப் பொதுக் கூட்டங்களிலும், ஆய்வு அரங்குகளிலும், கவியரங்குகளிலும், சாதாரண உரையாடல்களிலும் எல்லாத மதத்தவரும் பயன்படுத்துகிறார்கள்.
இந்தச் சிறப்பு இந்தியாவில் வேறு எந்தவொரு கவிஞருக்கும் கிடைத்தது இல்லை; இனியும் அப்படியொரு நிலை வருமா என்பது சந்தேகமே! தமிழ்நாட்டுக்கு 1920-களில் வள்ளல் ஜமால் முகமது சாஹிப் - காயிதெ மில்லத் அவர்களின் மாமனராகத் திகழ்ந்தவர் - தலைமையில் உருவாக்கப்பட்ட சௌத் இண்டியன் எஜுகேஷன் அசோசியேசன் என்னும் அமைப்பின் சார்பில், இன்று பெரம்பூர் ஜமாலியா அரபிக் கல்லுரி உள்ள வளாகத்தில் உலகப் பெரும் அறிஞர்கள் அழைக்கப்பட்டுத் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்யப்பட்டது. அப்படி நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு கள் உலகப் புகழ்பெற்றன. உதாரணமாக, முகமது மர்மடியூக் பிக்தால் அவர்களின் சொற்பொழிவுகள், ‘தி கல்சுரல் சைடு ஆஃப் இஸ்லாம்’ என்னும் நூலாக வெளிவந்து, உலகத்தைச் சிந்திக்க வைத்தது. அதைப் போலவே, மகாகவி இக்பால் அவர்கள் நிகழ்த்திய ஆறு சொற்பொழிவுகள், ‘தி கன்ஸ்ட்ரக்ஷன் ஆஃப் ரெலிஜன் இன் இஸ்லாம்’ - என்னும் நூலாக வெளிவந்து உலகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வழிகோலியது.
திருமதி இந்திரா அம்மையார் ஆட்சியின் போது ராகேஷ் சர்மா பூமியை ‘சாட்லைட்’ ஊர்தியில் சுற்றி வந்தார். ராக்கெட்டை விண்ணில் செலுத்தி, அது வெற்றிகரமாகப் பறக்கிறது என்றறிந்த பிரதமர் இந்திரா அம்மையார், ராகேஷ் சர்மா, ஹமாரா தேஷ் கைஸா ஹை? - விண்ணில் பூமியை வலம் வந்து கொண்டிருக்கும் ராகேஷ் சர்மாவிடம், ‘நமது தேசம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்கிறார். அதற்குப் பதில் தெரிவித்த ராகேஷ் சர்மா, ‘ஸாரே ஜஹான்ஸே அச்சா’ என்று மகாகவி இக்பாலின் பாடல் வரியைத் தான் கூறி, இந்தியாவை வர்ணித்தார். மகாகவி இக்பால் அவர்கள் தமது மரணத்துக்குச் சில காலத்துக்கு முன்னர் பண்டித நேருவைப் பார்த்தபோது, பல விஷயங்கள் பற்றி உரையாடல் நடக்கிறது. அப்பொழுது கவிஞர் சொல்கிறார்: ‘துinயோ ளை ய யீடிடவைiஉயைn யனே லடிர யசந ய யீயவசiடிவ’ - ஜின்னா, ஓர் அரசியல்வாதி; நீங்கள் ஒரு தேசபக்தர்’’ என்கிறார். இதனை நேருஜி எழுதிய ‘தி டிஸ்கவரி ஆஃப் இண்டியா’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இத்தனை சிறப்புகளுடன் இந்தியாவில் தோன்றிய கவிஞர் எவரும் இல்லை என்றால் அது மிகைப்பட கூற்று ஆகாது. இந்தியா சுதந்திரம் பெற்றது, 1947 ஆகஸ்டு 15. அன்றைக்கு தேசீய கீதம் என்று இன்றைய ‘ஜனகன’ இனம் காட்டப்பட வில்லை; பின்னரே இது தேசீய கீதம் என்று அரசியல் நிர்ணய சபையில் ஏற்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற அந்த நாளில் இந்தியாவில் பாடப்பட்ட பாடல் ‘ஸாரே ஜஹான்ஸே அச்சா’ தான்.
இதுபோன்று இன்னும் ஆயிரம் இருக்கிறது! சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகப் பேரறிஞர் ஆகி, ‘அல்லாமா’ என்னும் ஆன்மீகத் துறையில் அதி உன்னதப் பட்டத்துக்கு உரியவராகி, இந்திய மக்களின் இதய ஒற்றுமைக்கும், மதங்களின் சங்கமத்துக் கும், சுதந்திரத்துக்கும் பாடி, பாருலகால் போற்றப்பட்டு, இன்றளவும் உலக அரங்கில் உலக மகாகவி என்று உயர்த்தப்பட்டுள்ள முகமது இக்பால் அவர்களுக்கு இந்திய அரசில் ஓர் நினைவு நாள் இல்லை! நினைவு நாளில் ஓர் அறிவிப்பு இல்லை!
ஏனென்றால் மகாகவி இக்பால் அகில இந்திய முஸ்லிம் லீகில் இருந்தார்! கேரளாவில் மலப்புரம் என்று ஒரு மாவட்டத்தை உருவாக்கி, ஆட்சி நிர்வாகத்தைத் திறம்பட நடத்திட வேண்டும் என்று கேரள முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்ததுபோல, பிரட்டிஷ் இந்தியாவில் வடமேற்கு இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லிம் மாவட்டங்களையும் ஒன்றிணைத்து, ஒரு முஸ்லிம் மெஜாரிட்டி மாகாணத்தை உருவாக்குவதன் மூலம், இந்திய கூட்டமைப்பு அரசுக்கு வலிமை சேர்க்கலாம் என்று ஓர் அறிவுப் பூர்வமான ஆலோசனையை வழங்கினார். எத்தகைய தீர்க்கதரிசனமான அரசியல் ஆலோசனை!
அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அல்லாமா மகாகவி முகமது இக்பால் அவர்களின் கனவு, நனவாகவில்லை. அவர் மறைவை எய்தி விட்டார்!
பிற்காலத்தில் மகாகவி குறிப்பிட்ட முஸ்லிம் மெஜாரிட்டி மாகாணம், காயிதெ ஆஜம் அவர்களின் அரசியல் அணுகுமுறை யில் சுதந்திர பாகிஸ்தானாக உருவாகி விட்டது.
மகாகவி இக்பால் அவர்கள், இந்திய முஸ்லிம்களுக்குத் தனி சுதந்திர நாடு விரும்பியதாக வரலாற்றில் இல்லை. ஆனால், பாகிஸ்தான் பிரிவினைக்கு மகாகவி இக்பால் அவர்களின் முதல் ஆலோசனைதான் மூலகாரணம் என்று ஒரு கற்பனையான கருத்தைத் தவழவிட்டு, ஒரு சரித்திர சத்தியத்திற்கு - மகாகவி இக்பால் அவர்களின் பெருமைக்கு ஒரு தவறை இந்திய அரசும், இந்திய அரசியல் அரங்கும், பத்திரிகை ஊடகங்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
அல்லாமா மகாகவி முகமது இக்பால் அவர்களைப் போற்ற நினைப்பவர்கள் போற்றப்படுபவர். ‘இக்பால்’ என்பது ‘புகழ்’. புகழ் விரும்பும் நாடும் ஏடும் கவிஞர் இக்பாலைப் போற்றியாக வேண்டும்!
இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்திய இந்தியக் கவிஞரை இந்தியா மறப்பது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்குமா? இதயமுள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும்!
நன்றி : மணிச்சுடர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக