மத்திய பிரதேச மாநிலத்தில் மின்திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியதைக் கண்டித்து, சமூக சேவகியும், நர்மதா பாதுகாப்பு குழு தலைவருமான மேதா பட்கர் தலைமையில் கடந்த 4-ம் தேதி சிந்த்வாராவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மேதா பட்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு சிந்த்வாரா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து தன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று, நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மேதா பட்கர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதத்தை தொடர்வதாகவும் அவர் எச்சரித்தார்.
மேதா பட்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லியில் உள்ள மத்திய பிரதேச பவன் அருகில் போராட்டம் நடத்தினார். அப்போது மேதா பட்கரை கைது செய்திருப்பது ஜனநாயக படுகொலை என்று அவர் கடுமையாக சாடினார்.
மேதா பட்கர் கைது செய்யப்பட்டு 2 நாட்கள் ஆகியும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தாததைக் கண்டித்து, ஜன் சங்கர்ஸ் மோர்ச்சா உறுப்பினர் அனுராக் மோடி, ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், கோர்ட் உத்தரவையடுத்து மேதா பட்கர் மற்றும் 19 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக