Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 1 அக்டோபர், 2012

"4-10-2012 மணிச்சுடர் வெள்ளிவிழா" புதிய சகாப்தம் உருவாக்கும் விழாவில் உங்களை எளியேன் நான் காண வேண்டும்...... கே.எம்.கே.


4-10-2012 வியாழக்கிழமை மால 5 மணி! இந்த நாளின் தனித்தன்மையும் முக்கியத்துவமும் `மணிச்சுடர்’ வாசகர் நேசகர்கள் அறிவார்கள்! இ.யூ. முஸ்லிம் லீகினர் இதன் வரலாற்றுச் சிறப்பைப் புரிவார்கள்! சமுதாயப் பெரியயோரும், பெருமக்களும் இந்த நாளின் அருமையைத் தெரிந்து அலைஅலையாய் அன்றைய தினத்தில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கூடுவார்கள்! மணிச்சுடரின் வெள்ளிவிழாச் சிறப்பைப் பாடுவார்கள்!

அன்றைய நாளில்தான் `மணிச்சுடர்’ பிறப்பெடுக்க மூலகாரண கர்த்தா சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமத் சாஹிப் - நம் இதயங்களைக் கவர்ந்த இனிய தலைவர் பிறந்த நன்னாள்!

ஆகவேதான், தேசிய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும், சிறுபான்மையினரின் - குறிப்பாக, முஸ்லிம்களின் கலாச்சாரத் தனித்தன்மையை நிலை நிறுத்துவதற் கும் பாடுபடும் `மணிச்சுடர்’ நாளேட்டின் வெள்ளி விழாவை அன்றைக்குக் கொண்டாடுகிறோம்.

`குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பது தமிழ் மக்களிடையில் தவழும் பொன் மொழி! அக்டோபர் 4 - வியாழன் மாலை 5 மணிக்கு நடக்கும் `மணிச்சுடர்’ 25-வது ஆண்டு - வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா கொண்டாடப்படு கிறது என்று சொல்வதைவிட, இ.யூ. முஸ்லிம் லீகினர் கடந்த 65 ஆண்டு காலமாக நடந்து வந்த பாதையில் பட்டுள்ள பாடுகளையும், அவற்றால் படிக்கப் பெற்ற பாடங்களையும் இருபத்து ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியும், பரப்பியும், பிரச்சாரம் செய்தும் வந்திருக்கின்ற மணிச்சுடருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விழா நடத்தப் பெறுகிறது என்று கூறுவதே பொருத்தமாகும்.

மணிச்சுடருக்குப் பாராட்டு என்பது அதனை உருவாக்கியவர் களுக்கும், அது தொடர்ந்து நடந்திட உதவியவர்களுக்கும், அதில் உழைத்தவர்களுக்கும், அதன் வளர்ச்சிக்கு உற்ற துணையானவர் களுக்கும் வாழ்த்துக் கூறுவதுதான்! அதற்காகவேதான் பத்திரிகைத் துறையில் பட்டறிவு மிக்க பார்போற்றும் கவிக்கோமான் - தமிழினத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அழைத்திருக்கிறோம்!

இவர் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் - அவருக்கு ஆதரவாக எழுதிய காலத்திலும், அவரின் அரசை விமர்சித்து எழுதிய காலத்திலும் மணிச்சுடருக்கு அரசு விளம்பரம் தந்து ஆதரவளித்து வந்த அறிஞர்!அவர் வழியில் நிற்கும்தனயன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.

திராவிடர் கழகத் தலை வர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பெரியாரின் நிழலாகவும், குரலாகவும் நம்மிடையில் வாழ்பவர் `விடுதலை’யின் சிறப்புமிகு ஆசிரியர்! மணிச்சுடர் எழுதி வரும் கருத்துக்களையும், கொள்கைகளையும் பாராட்டுவதுடன், விடுதலையில் அவற்றை பிரசுரித்து பேராதரவு காட்டும் பகுத்தறிவுப் பண்பாளர்! அவரின் வாழ்த்துரையை அனைவரும் கேட்க வேண்டும் அல்லவா! சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர் என்பதற்காக விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

மக்கள் தலைவர் மறைந்த மனிதநேயர் ஜி.கே. மூப்பனார் அவர்கள், ஒரு நெருக்கடியான நேரத்தில் மணிச்சுடர் நாளிதழுக்கு மூன்று இலட்சம் ரூபாய் தந்து, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் களுக்குரிய சந்தா என்று கூறி பேராதரவு தந்துள்ளார்கள். அந்தத் தலைவரின் அருமைத் தொண்டர் என்னும் முறையில் பீட்டர் அல்போன்ஸ் வருகிறார்! வாழ்த்துரை தருகிறார்!

இவற்றை எல்லாம் நேரில் பார்க்க வேண்டும்! வரலாற்றை உணர்ந்து பார்த்து வருங்காலத்துக்கான வரைவுத் திட்டங்களை வடிக்க வேண்டும் என்னும் நல்ல நோக்கத்தில்தான் இந்த வெள்ளி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னணியினரும் முஸ்லிம் லீகரும் அணிஅணியாக வந்து விழாவுக்கு அணியும், அழகும் சேர்க்கிறார்கள். நமது தேசியத் தலைவர் இ.அஹமது அவர்களின் ஆசியுரையும் விழாவுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.

இன்றைக்கு `மணிச்சுடர்’ 26-வது ஆண்டுப் பயணத்தில் இருக்கிறது. 25 ஆண்டு வெள்ளிவிழா என்று அறிவித்திருக்கி றோம். ஆனால், இருபத்து ஐந்து ஆண்டு `மணிச்சுடர்’ தடைபடாமல் தொடர்ந்து வந்ததா என்றால் அது இல்லை. 1991-லிலும், 2007-லிலும் இரண்டு முறை நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு முறையும் இரண்டு ஆண்டுகள் வெளி வராமல் இருக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டிருக் கின்றன.

அத்தகைய தடைகளும், இடைஞ்சல்களும், நிறுத்த வேண்டிய சூழ்நிலைகளும் அடுத்து வரும் `மணிச்சுடர்’ பொன்விழாவுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, இந்த வெள்ளி விழாவை - சிறப்புக்குரிய விழாவாக நடத்திக் காட்ட வேண்டும் என்று முனைந்திருக்கிறோம்.

அக்டோபர் 4 - வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் `மணிச்சுடர்’ வெள்ளி விழாவில் இ.யூ. முஸ்லிம் லீகில் இயக்கத்தை வளர்ப்பவர் ஒவ்வொருவரும் இயக்கத்தை வளர்க்கப் பணியாற்றும் ஒவ்வொருவரும் பங்கேற்பது வரலாற்றை உருவாக்குவது ஆகும்!

தமிழக இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் புதிய சகாப்தம் உருவாக்கும் விழாவுக்கு எல்லோரும் வாருங்கள்! உங்களை இந்த எளியேன் காண வேண்டும்! ஏனெனில் பொன்விழா நடக்கும் போது அந்த வாய்ப்பு இவனுக்கு கிட்டுமா? அது சந்தேகந்தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக