டில்லியில் நடைபெற்ற, அனைத்து மாநில, போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:
நம் நாட்டில், பல்வேறு இனங்கள், மொழிகள் மற்றும் கலாசார பழக்க வழக்கங்கள் இருந்தாலும், அதிலும் ஒற்றுமையாக இருப்பதே, நமது பலம். ஆனால், கடந்த சில மாதங்களாக, நாட்டின் வடகிழக்கு பகுதியில், வன்முறை மற்றும் கலவரம் தலைதூக்கியுள்ளது.இது, அனைவருக்குமே கவலை தரக்கூடிய விஷயம். இதன் தொடர்ச்சியாக, தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், சில சம்பவங்களும் நடைபெற்றன.மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில், நல்லதொரு இணக்கம் நிலவி வந்தது. ஆனால், சமீபத்திய சம்பவங்களால், அந்த மத நல்லிணக்கம் தேய்வது போலத் தெரிவது, மிகவும் கவலைக்குரிய விஷயம். இது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.மக்கள் மத்தியில், என்ன மாதிரியான உணர்வுகள் நிலவுகின்றன, அடிமட்டத்தில் என்ன தான் நடக்கிறது என்பதையெல்லாம், போலீசார் முழுமையாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.
பிரச்னையை ஏற்படுத்தும் நபர்களை, முன்கூட்டியே கண்டறிதல், சரியான நேரத்தில் பொருத்தமான சட்டத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற் றோடு சேர்த்து, அமைதி மற்றும் சமூக நல்லிணக்க சூழ்நிலையை, முன்கூட்டியே ஏற்படுத்துதலும் அவசியம்.இணையதளத்தை பயன்படுத்தியும், மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், வன்முறை மற்றும் வதந்தியைப் பரப்புவது, சமீப காலமாக, அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தத் தொழில் நுட்பங்களை வன்முறையாளர்கள், எவ்வாறு கையாளுகின்றனர் என்பது பற்றிய முழு விவரங்களையும், போலீசார் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்தத் தொழில்நுட்பங்கள் வாயிலாக நடக்கும் தவறான பிரசாரங்களை, எவ்வாறு அடக்குவது என்பது மிகவும் அவசியம். இனி வரும் காலங்களில், மிகவும் சவாலாக இருக்கப்போகும் இந்த பிரச்னைகளை, திறமையுடன் அணுக, போலீசார் பயிற்சி பெற வேண்டும்.மாநிலங்கள் சிலவற்றிலும், அவற்றின் எல்லைப்புறங்களிலும், நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மாநிலங்களின் எல்லைகளில் உள்ள காடுகளை, நக்சலைட்கள், தங்களின் புகலிடமாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் வைக்கும் கண்ணி வெடிகளால், உயிர் பலிகளும் நிகழ்கின்றன. இதைத் தடுக்க, துணை ராணுவப் படையினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.நக்சலைட்கள் அபாயம் உள்ள மாநிலங்களில், மக்கள் தொகைக்கு ஏற்ப, போலீசாரின் எண்ணிக்கை இருக்க வேண்டும். போலீசாருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் வழங்கப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக