திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் கோடையிலும் தமிழகத்தின் மற்ற நகரங்களைப்போல் 100 டிகிரியையொட்டி வெப்பம் பதிவாகியிருந்தது. கோடைக்குப்பின்னரும் அதே வெப்பநிலை நீடித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் காலநிலையில் மிகப்பெரும் அளவுக்கு மாற்றம் ஏற்படவில்லை. கடந்த மாதத்தில் வானில் மேகங்கள் திரள்வதும், சாரல் மழை பெய்வதுமாக ஓரிரு நாள்களில் காலநிலை இருந்தது. ஆனால், கடந்த 2 வாரமாகமே திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வெயில் சுட்டெரித்தது.
பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒருவாரமாக பதிவாகியுள்ள வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியே இருக்கிறது. கடந்த 18-ம் தேதி 103 டிகிரி வெப்பநிலை இருந்தது.
அதுபோல் செவ்வாய்க்கிழமையும் வெப்பநிலை 103 டிகிரியாக பதிவாகியிருக்கிறது. கடந்த கோடையில்கூட திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் ஒருசில நாள்களை தவிர்த்து மற்ற நாள்களில் 100 டிகிரிக்குள் வெப்பநிலை இருந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளைகளில் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை பகலில் நகரில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் அவதியுற்றனர். வீடுகளிலும் மக்கள் புழுங்கி தவிக்க நேரிட்டது. ஏற்கெனவே மின்தடையால் பகலில் மின்விசிறிகள் இயங்காமல் மக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழகத்திலேயே அதிகம்: பாளையங்கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை 103 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. இது தமிழகத்தின் மற்ற நகரங்களைவிட அதிகமாகும். வெயில் நகரம் என்றழைக்கப்படும் வேலூரில் 97 டிகிரி வெயில்தான் பதிவாகியிருந்தது.
கன்னியாகுமரியில் 90 டிகிரி, தூத்துக்குடியில் 93 டிகிரி வெயிலும் பதிவானது.
கோடையை மிஞ்சும் வெயில் சுட்டெரிப்பதால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. பல்வேறு இடங்களில் பொது குடிநீர் குழாய்களில் தண்ணீருக்காக நூற்றுக்கணக்கான குடங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களும் காலிகுடங்களுடன் வீதியில் இறங்கி போராட தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக பாளையங்கோட்டையில் பதிவான வெப்பநிலை (பாரன்கீட்):
செப்.18- 103 டிகிரி
செப்.19- 101 டிகிரி
செப்.20- 102 டிகிரி
செப்.21- 101 டிகிரி
செப்.22- 102 டிகிரி
செப்.24- 101 டிகிரி
செப்.25- 103 டிகிரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக