பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
அகண்ட பாரதத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சிறு மாநிலங்களில் ஒன்று அஸ்ஸாம். பிரம்மபுத்திரா எனும் பிரம்மாண்ட ஆற்றின் கம்பீரத் தோற்றம் இம்மாநிலத்தின் பூகோள அழகு என்றால் மிகையாகாது. இந்த ஆற்றின் அகலமே நான்கு கிலோமீட்டர் என்கிறார்கள். சுமார் 3 கோடி மக்களே வாழும் இம்மாநிலத்தில் போடோ எனும் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி கோக்ரஜார் மாவட்டம்.
இந்த மாவட்டத்தில்தான் சென்ற 20.07.2012 வெள்ளியன்று போடோ இன இளைஞர்கள் நான்குபேர் அடையாளம் தெரியாத சில விஷமிகளால் தாக்கப்பட்டு மாண்டனர். இதற்கு கோக்ரஜாரில் வசிக்கும் சில முஸ்லிம்கள்தான் காரணம் என்று வதந்தி பரவ, ஆயுதங்கள் தாங்கிய போடோ இன வெறியர்கள் அப்பாவி முஸ்லிம்களைத் தாக்கத் தொடங்கினர். எண்ணிக்கையில் மிக, மிகச் சிறுபான்மையினராக அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் செய்வதறியாது உயிர் தப்பினால் போதும் என்று பதை பதைத்தவர்களாக, குழந்தைகளையும், வயோதிகர்களையும் தங்களின் மேல் சுமந்தவர்களாக தங்கள் இருப்பிடங்களைத் துறந்து ஓட ஆரம்பித்தார்கள். ஓட, ஓட விரட்டி அப்பாவி முஸ்லிம்களை ஆயுதங்களால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் பல உயிர்களை வேட்டையாடினார்கள் போடோ இன வெறியர்கள். ஏழை முஸ்லிம்களின் உடமைகள் சூறையாடப்பட்டன; குடிசைகள் தீ வைக்கப்பட்டன; மஸ்ஜித்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன; முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகள் அனைத்தும் அடையாளமே தெரியாத அளவுக்கு திறந்தவெளி மைதானமாக ஆக்கப்பட்டன. இத்தனைக்கும் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜனத் தொகையில் 5 சதவிகிதமே போடோ இன மலைவாழ் மக்கள். முஸ்லிம்களின் ஜனத்தொகை 33 சதவிகிதம். ஆனாலும், அஸ்ஸாம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் பங்களாதேஷ் எல்லை பகுதியை ஒருபுறமாகவும், மேற்கு வங்காளம் மற்றும் மேகாலயா மாநிலங்களின் எல்லைப் பகுதிகளை மறுபுறமாகவும் கொண்ட கோக்ரஜார் மாவட்டத்தில்தான் இந்த 5 சதவிகித போடோ இன மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களைவிட 6 அல்லது 7 மடங்கு அதிகம் வாழும் முஸ்லிம்கள் அம்மாநிலத்தில் எல்லா பகுதிகளிலும் பரவலாக வசிக்கிறார்கள். பெரும்பாலும் கல்வியறிவு அற்றவர்களாக, நாகரீகம் தெரியாதவர்களாக, கடும் உடல் உழைப்பையே நம்பியவர்களாக வாழும் இவர்கள்தான் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கோக்ரஜார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வெளியேறி சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தூப்ரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
ஏறத்தாழ புனித ரமலான் தொடக்கத்திலிருந்தே பெரும் துயரத்திற்கும், கடும் சோகத்திற்கும் உள்ளான இம்மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பலியாகியிருக்கிறார்கள் என்பதும் பெரும் வேதனைக்குரிய செய்தி. கோக்ரஜார் பகுதியில் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி பெரும் கலவரத்தை உருவாக்கியதையறிந்து அரசு காவல்துறையின் பறக்கும் படையினரும், மத்திய அரசின் பாதுகாப்புப் படையினரும் இப்பகுதிக்கு விரைந்து வந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர். அவ்வப்போது கலவரத்தின் போக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் திடீர் திடீரென ஆயுதம் தாங்கிய போடோ இன வெறியர்களின் அத்துமீறல்கள் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.இத்தகைய அத்துமீறல்களால் போடோ இன மக்களின் சில பிரிவினரேகூட பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களும் ஒருவகையில் அப்பாவிகள்தான். என்ன செய்வது? தீவிரவாதம் தலைதூக்குகிறபோது யார் என்கிற அடையாளமே தெரியாமல் வெறிச் செயல்கள் மாத்திரமே பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பாதிப்புக்குள்ளாகி உடமைகளையும் உயிர்களையும் இழந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் துப்ரியிலேயே பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக் கிறார்கள். இவர்களின் உணவுக்கும், தங்குமிடத்திற்கும் மாநில அரசு உதவிகள் செய்தாலும் அவர்களின் துயர் துடைக்கும் பணிகளை முழுமையாக்கிவிட முடியாது என்பது நாம் யாவரும் அறிந்ததுதான். இருந்தாலும் சென்ற ரமலான் மாதம் பிறை 12 (01.08.2012) அன்று தலைநகர் டில்லியில் கூடிய முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகக்குழுவில் அஸ்ஸாம் கலவரம் பற்றிய தகவல்கள் மிகுந்த கவலையுணர்வோடு விவாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு அதற்கான குழுவும் நியமிக்கப்பட்டது. அஸ்ஸாம் கலவர நிவாரண நிதி திரட்டிட தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு நிதி சேர்க்க முஸ்லிம் லீகர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிடப் பணிக்கப்பட்டனர். மிகச் சிறப்பாகச் செயல்பட்டு குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் கணிசமான அளவுக்கு நிதி திரட்டப்பட்டு வருகிற தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதற்கிடையே சென்ற 23.08.2012 அன்று முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் மாண்புமிகு மத்திய அமைச்சர் இ. அஹமது அவர்களின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அளவில் நானும், ஜனாப் ஈ.டி. முகம்மது பசீர் அவர்களும், முன்னாள் எம்.பி. ஜனாப் அப்துல் வஹாப் அவர்களும், தேசிய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் அவர்களும் மற்றும் தேசிய நிர்வாகிகளும் அடங்கிய எட்டு பேர் கொண்ட நிவாரண குழு அஸ்ஸாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களிலேயே நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவைகளைக் கண்டறிவது என திட்டமிட்டு அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தி சென்றோம். அங்கிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள துப்ரிக்குச் சென்று முகாம்களைக் கண்காணித்து வரும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். பிறகு நேரில் சென்று முகாம்களில் மக்களைச் சந்திக்கச் சென்றோம்.
முகாம்களில் நுழைந்ததுதான் தாமதம்; எங்களைப் பார்த்து ஓடி வந்து கதறி அழுதவர்களாய்; இல்லை, இல்லை, கதறி ஓலமிட்டவர்களாயும், சொல்லுவதற்கே முடியாமல் உடல் நடுங்கி திணறியவர்களாயும், தங்களின் பிள்ளைச் செல்வங்களை பலி கொடுத்தவர்களாயும், கணவனை இழந்து மனைவி, பெற்றோர்களை இழந்து பிள்ளைகள், சொந்த பந்தங்களை இழந்து அநாதைகள் என கைவிடப்பட்டவர்க ளாயும், எல்லாவற்றையும் இழந்தவர்களாயும் பரிதவித்துப் பதைக்கப் பதைக்கத் தங்கள் மார்புகளில் அடித்துக் கொண்டு அலறினார்களே! யாஅல்லாஹ் இவர் களுக்கு சபுர் எனும் பொறுமையை வழங்குவாயாக! என்ற துஆவை மட்டுமே உடனடி ஆறுதலாகத் தரமுடிந்தது. பரிதவித்து நின்ற அந்த மக்கள் பாவம்; படிப்பற்றவர்கள்; நாகரீக வாழ்வு தெரியாதவர்கள்; எப்படி பேசுவதென்றே புரியாதவர்கள்; சுகவாழ்வு என்றால் என்னவென்றே அறியாதவர்கள்; இருக்கும் ஆடைகளையே இரண்டாய், மூன்றாய் கிழித்து தங்களின் உடல்களையும், பிள்ளைகளின் உடல்களையும் மறைத்துக் கொண்டு முகாம்களில் அடங்கிக் கிடந்தார்கள்.
பிறைநெஞ்சே! அவர்கள் கொண்ட கோலங்களைக் கண்ட என் கண்கள் என் உடலைத் துடிதுடிக்கச் செய்தன. அழுது கொண்டே என்னைச் சுற்றி வளைத்த பிள்ளைகளையும், தாய்மார்களையும், வயோதிகர்களையும் கட்டி அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்லி என் முகத்தை மறுபுறம் திருப்பினேன்; 6 அல்லது 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் கோவணம் கட்டிக் கொண்ட நிலையில் தங்களின் நோயாளித் தந்தையின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு அழுதவாறே என்னை நோக்கி வந்தனர்; அவர்களை அள்ளி அணைத்தவாறே என்ன? என்று கேட்டேன். இந்த பெண் பிள்ளைகளின் மானத்தை மறைக்க என்னிடத்தில் ஆடை இல்லை; எனது தோளில் போட்டிருந்த டவளை நீளவாட்டில் இரண்டாகக் கிழித்து இந்தப் பிள்ளைகளுக்குக் கோவணமாகக் கட்டிவிட்டுள்ளேன் என்றார் அந்த நோயாளித் தந்தை. உடைந்தே போனேன். நிற்க வலுவில்லாத உடம்பாய் என்னை உணர்ந்தேன். தரையில் அமர்ந்தேன்; என் இரு மடிகளிலும் உட்கார்ந்த அவ்விரண்டு பிள்ளைகளின் தேகங்கள் எனக்குப் பதராய் இருந்தன; காரணம் பசியாய் இருக்கும் இந்த பிள்ளைகளின் வயிற்றில் உணவில்லை; வெறும் காற்றுத்தான் நிரம்பி இருந்திருக்கும். இதுபோன்று நிலைகுலையச் செய்திடும் சம்பவங்களை நெஞ்சில் சுமந்தவனாய், ஏன்; குழுவினர் அனைவருமே சோகத்தில் மூழ்கியவர்களாய் அதே 400 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து கவுஹாத்தி வந்தடைந்தோம்.
துப்ரியில் மட்டும் 133 முகாம்களில் 1 லட்சத்து 46 ஆயிரம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். வேதனையின் ஆழத்தில் மூழ்கியிருந்த நாங்கள் மறுநாள் அஸ்ஸாம் மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு தருண் கோகாய் அவர்களைச் சந்தித்து நிவாரணப் பணிகளைத் துரிதமாக்க ஆவண செய்தோம். அதைத் தொடர்ந்து கல்கத்தாவிலிருந்து சேலைகளும், கைலிகளும், குழந்தைகளுக்கு ஆடைகளும் வாங்கி டிரக்குகளில் நிரப்பி அனுப்ப ஏற்பாடுகளை மேற்கொண்டோம்; அவைகளை முறையாக விநியோகம் செய்திட தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் அவர்களின் தலைமையில் குழுவை அமைத்து அங்கேயே தங்கி இருக்கச் செய்திருக்கிறோம்; நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முஸ்லிம் லீகின் தலைமை கேட்டுக் கொண்டதற்கிணங்க ��முஸ்லிம் லீக் நிவாரண நிதி�� என்ற வங்கிக் கணக்கில் நல்லுள்ளம் கொண்டோர் நிதியளித்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் தாய்ச்சபை முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களும், ஆடை வகைகளும், போர்வைகளும் மொத்தமாக வாங்கப்பட்டு தொடர்ந்து முகாம் களுக்கு அனுப்பப்படுகின்றன.
பிறைநெஞ்சே! தங்களின் உடமைகளை இழந்து வீடுகளை இழந்து, உயிர்களையும் பலி கொடுத்து நிராயுதபாணியாய் நிலைகுலைந்து நிற்கும் நம் சொந்தங்கள் அஸ்ஸாமில் நாதியற்றவர்கள் அல்ல; இதோ உங்களின் உணர்வுப் பதாகைகளாய் நாங்கள் இருக்கிறோம் என உரைத்திடும் உன் உணர்ச்சிப் பாசறையை உன் உழைப்பால் காட்டு;
ஆயுதம் ஏந்தி ஆட்கொள்ளிகளாய் அலையும் ஆவேசக்காரர்கள் போடோ வெறியர்களின் ஈனப்பசி பொசுங்கிப்போவது நிச்சயம்; நீதி நிலைத்திடும்;
நிதியை சேர்த்தாவது நிவாரணம் தர நில்லாமல் உழைத்திடு நிறைந்திருக்கும் நல்ல உள்ளங்களைத் தேடி; வல்ல அல்லாஹ்வின் பேரருளை நாடி.
இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக