Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லை: குடியரசுத் தலைவர்


உலகத்தரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மலர்வதற்கு இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் என இந்திய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான கரக்பூர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
கரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதைக் கொண்டாடும் நோக்கில் நடந்த வைரவிழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே அறிவியல் தேடலையும், ஆராய்ச்சி மனோநிலையையையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டிய உடனடித் தேவை இந்தியாவுக்கு உள்ளது என்று பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இல்லாதிருப்பதன் காரணங்கள் பற்றி இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.சி.குழந்தைசாமி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.
"கல்வி புகட்டும் அதேநேரத்தில் ஆராய்ச்சிகள் செய்து அறிவுப் பெருக்கத்துக்கு பங்காற்ற வேண்டிய இடங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அந்த நிலை இல்லை" என்று குழந்தைசாமி கூறினார்.
"இந்தியாவில் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களில் பாடம் புகட்ட வேண்டியது மட்டுமே ஆசிரியர்களுக்கு கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் கல்விக் கட்டமைப்பில் இடமில்லை" என்று அவர் நொந்துகொண்டார்.
இந்த நிலை மாறினால்தான், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவால் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக