Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சென்னை உயர்நீதி மன்றத்தின் 150 ஆண்டுகால வரலாறு

சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில் 150வது ஆண்டு விழா செப்டம்பர் 8ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.


இவ்விழாவில் குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த சூழலில் அதன் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவது அவசியம் .



ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை சென்னையில் தொடங்கியபொழுது, 1640-ல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியவுடன், வழக்குகளை விசாரிப்பதற்கென "சவுல்ட்ரி' என்று சொல்லப்படுகின்ற சத்திர நீதிமன்றம் தொடங்கப்பட்டு, அங்கு சிவில், கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

1688-ல் மேயர் நீதிமன்றம், 1739-ல் கச்சேரி நீதிமன்றம், 1798-ல் ரிக்கார்ட் நீதிமன்றம் என்று பலவகையான சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1801-ல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்றாலும், சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு 60 ஆண்டுகாலம் பதிவில் இருந்தது.

1861-ல் விக்டோரியா மகாராணி சென்னை, கல்கத்தா, பம்பாயில் உயர் நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டார். முறையாக 150 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1862 ஆகஸ்ட், 15-ல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பின் அதே ஆகஸ்ட் 15-ல் இந்தியா விடுதலை பெற்றது.

தற்போதுள்ள நீதிமன்றக் கட்டடத்துக்கான பணி 1888-ல் தொடங்கப்பட்டது. முதல் தலைமை நீதிபதியாக கோலி கார்மன் ஸ்காட்லாண்ட் நைட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் இந்த நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டனர். வழக்குகளில் ஆஜராவதற்காக வக்கீல்கள் மற்றும் "அட்டர்னி அட் லா' என்ற தகுதி பெற்றவர்களை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.
அப்போதைய மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ராஜாஜி சாலையிலுள்ள சிங்காரவேலர் மாளிகை, கஸ்டம்ஸ் ஹவுஸ் ஒட்டிய பகுதியில் செயல்பட்டது. தற்போதைய பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் இந்த அற்புதக் கட்டடம் கட்ட நான்கு ஆண்டுகள் ஆனது. இங்கு கட்டடப் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன் அங்கிருந்த சென்னகேசவப் பெருமாள், மல்லீஸ்வரர் ஆலயங்கள் பூக்கடை காவல் நிலையம் அருகில் மாற்றி அமைக்கப்பட்டன.

இங்குதான் முதன்முதலாக சென்னைக்கு கலங்கரை விளக்கம் அமைந்தது. ஜே.டபிள்யு. பிசிங்டனின் வடிவமைப்பில், ஹென்றி இர்வின், ஜெ.எச். ஸ்டீபன் போன்றோர்களின் முயற்சியில், இந்தோ - சாராசனிக் முறையில் இன்றைய இந்த கம்பீரக் கட்டடம் எழுந்தது. அதற்கான அன்றைய மொத்த செலவு 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய்.

ஜூலை 12, 1892 அன்று காலை 10 மணி அளவில் சென்னை மாகாண கவர்னர் பாரிமுனை வர, அங்கிருந்து அவர் உயர் நீதிமன்ற வளாகத்துக்குப் பிரதான வாயில் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். தலைமை நீதிபதியாக இருந்த சர் ஆர்தர் காலின்ஸ் மற்றும் சக நீதிபதிகள் அவரை வரவேற்று, திறப்பு விழா நடக்கும் நீதிமன்ற அரங்குக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உச்ச நீதிமன்றச் சாவியை பொதுப்பணித் துறைச் செயலர் கவர்னரிடம் முறைப்படி வழங்க, அதை கவர்னர் தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

பிரமிக்கச் செய்யும் இந்தக் கட்டடத்தைக் கண்டு செஞ்சி ஏகாம்பர முதலியார் உயர் நீதிமன்ற அலங்கார சிந்து என்று பாடி, அதை 1904-ல் பூவிருந்தவல்லி க. துளசிங்க முதலியாரால் வெளியிடப்பட்டது. அந்த அலங்கார சிந்துவில் குறிப்பிட்ட வரிகள்:
""அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி
அடுத்தகத்திலும் பெருங்க கொடத்தைபோல வெகுகூட்டி
கண்டவர் பிரமிக்க கலசமதிலே மாட்டி
கண்கள் சிதறும்படி தங்கத்திலூட்டி...''
1916-ல் செப்டம்பர் 22-ல் எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் நீதிமன்றத்தின் மீது குண்டு வீசியதில் சுற்றுச் சுவர்கள் சேதமடைந்தன. அதுகுறித்து பதிவுகள் இன்றைக்கும் இந்தக் கட்டடத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள ராஜாஜி சிலை அருகில் மதில்சுவரில் கல்வெட்டாக உள்ளன. இரண்டாம் உலகப் போரின்போது இந்த நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அதன் கோப்புகள் கோவைக்கும் அனந்தப்பூருக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. சிலகாலம் கோவையில் சென்னை உயர் நீதிமன்றப் பணிகள் நடைபெற்று, போர் அச்சம் தணிந்தபின் தி.நகரில் உள்ள ஆங்கிலோ - இந்தியப் பள்ளியில் உயர் நீதிமன்றம் சிலகாலம் தனது பணிகளைச் செய்தது.

இப்படி நீண்ட வரலாறு கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் பல செய்திகள், நிகழ்வுகள், கம்பீரமான கட்டடங்கள் போன்றவை மட்டுமல்லாமல், நீதியை நிலைநாட்டிய மெத்தப்படித்த, நுண்மான் நுழைபுலம் கொண்ட நீதிபதிகள், ஆற்றலும் பேரறிவும் பெற்ற வழக்குரைஞர்கள் இந்த வளாகத்தில் கம்பீரமாக உலவியது பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தெரு விளக்கில் படித்த திருவாரூர் முத்துசாமி ஐயர்தான், ஆங்கிலேயர் காலத்தில் 1878-ல் முதல் இந்திய நீதிபதியாக அமர்ந்தார். நாடு விடுதலை பெற்றவுடன் டாக்டர் ராஜமன்னார் 1948-லிருந்து 1966 வரை நீதிபதியாக இங்கு அமர்ந்தது நீதித்துறையில் ஒரு மறுமலர்ச்சி காலம்.

உலகில் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகத்தைக் கொண்டுள்ள இங்கு நடந்த வழக்குகளில் பல பரபரப்பான தீர்ப்புகளும், நியாயங்களும் வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டக் கூறில் 15 திருத்தங்கள் பெற வழிவகுத்தது. வ.உ.சி. ஆயுள் தண்டனை வழக்கு, வாஞ்சிநாதன் வழக்கு, தியாகராஜ பாகவதர் - என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்குகள் என வரலாற்றுப் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கானவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதிகள் பதஞ்சலி சாஸ்திரி, கே.சுப்பாராவ், ஏ.எஸ்.ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்றோர் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக ஆனார்கள். இங்கிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாகச் சென்றவர்களில் டி.எல். வெட்கட்ராமய்யர், அழகிரிசாமி, பி.எஸ்.கைலாசம், இரத்தினவேல் பாண்டியன், வி.இராமசாமி, வரதராசன், எஸ்.நடராசன், எஸ்.மோகன், கே.வேங்கடசாமி, ஏ.ஆர்.இலட்சுமணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கடந்த 1962-ல் இதன் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.எல்.வெங்கட்ராமய்யர் கர்நாடக இசைப் பாடல் பாட, அன்றைய பப்ளிக் பிராசிக்யூட்டர் வி.பி.ராமன் தனது 38 -வது வயதில் வயலின் வாசிக்க ஓர் அரிய இசை நிகழ்ச்சி அப்போது நடந்தது. நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயர், இசைப் பேரரசி டி.கே. பட்டம்மாளுக்கு முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளைக் கற்றுத்தந்த ஆசான் ஆவார்.
அன்றைய நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தமிழ் இலக்கியம், இசை, கலை, சமூக மேம்பாடு என்று சகல துறையிலும் சிறந்து விளங்கினர். திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நீதியரசர் சிவசாமி ஐயர் கல்விக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.

ரசிகமணி டி.கே.சி.யின் சகா, நீதிபதி மகராசன், நீதிபதி மு.மு.இஸ்மாயில் போன்றோர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். இன்றைக்கும் மகராசனால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஷேக்ஸ்பியரின் "கிங் லியர்' படிக்கப் படிக்கத் திகட்டும்.
நீதிபதி மு.மு. இஸ்மாயில் தலைமையிலான குழுவால் தயாரித்து வெளியிடப்பட்ட சென்னை கம்பன் கழகத்தின் கம்பராமாயணப் பதிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பைபிள் தாளில் அச்சிடப்பட்ட அந்த கம்பராமாயணப் பதிப்பு பலராலும் இன்று பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்துக்குப் போனால், உயர் நீதிமன்ற மகாராஜாவைத் தெய்வத்துக்கு இணையாகப் பேசுவதுண்டு. ஒரு சமயம் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் பயணிக்கும்பொழுது செய்துங்கநல்லூரில் டீக்கடை விளம்பரப் பலகையில் "ஐகோர்ட் மகாராஜா துணை' என்று போடப்பட்டிருந்தது. அதுகுறித்து, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜனை குறிப்பதுதானா இது என்று கேட்டபோது, "ஒரு சிலர் ஆம்; அது அவரைக் குறிப்பதுதான்' என்றனர். ஆனால், அதுகுறித்த தெளிவான கருத்தை அறிய முடியவில்லை. இப்படியாக கிராமப்புறத் தரவுகளிலிருந்து உயர் நீதிமன்றத்தை எவ்வளவு பூஜிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடிகிறது.
வி.கே. திருவேங்கட ஆச்சாரியார் அட்வகேட் ஜெனரலாக இருந்தபொழுது, காமராசர் முதல்வராக இருந்தார். ஒரு முக்கிய வழக்கு குறித்து எனக்குத் தெளிவுபடுத்துங்கள் என்று ஒரு முதலமைச்சரைத் தன் வீட்டுக்கே வரவழைத்தவர்தான் வி.கே.டி. அந்த அளவு தங்கள் தரத்தைப் பாதுகாத்து, வழக்கறிஞர் தொழிலுக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தவர்கள் அவர்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றிய ஜான் புரூஸ் நார்டனின் புதல்வர் ஏர்லி நார்டனைப் பற்றிச் சொல்ல வேண்டும். இவர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று, பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணியாற்றினார்.
இவர் பின்னாளில் தன்னை இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக் கொண்டதோடு, அதன் சட்டதிட்டங்களை வகுப்பதிலும் பங்கேற்றவர். ஆங்கிலேயர்கள் இவரை தேசத் துரோகி என்று குறிப்பிட்டனர். உடனே நார்டன், அநீதியை எதிர்ப்பதும், எந்த ஒரு நாட்டுக்கும் தங்களின் சொந்த விஷயங்களை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு உரிமை வேண்டும் என்று கோருவதால் தேசத் துரோகி என்று கூறினால், நான் அப்படிப்பட்ட தேசத் துரோகியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.

÷வங்காளம் பிளவுபட்டபோது அதனை எதிர்த்து நடைபெற்ற அன்னிய பொருள் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அதனை ஒடுக்க அரசு பலவகையிலும் முயன்றது. அப்போது மசாபூர் மாவட்ட நீதிபதி கிங்ஸ்போர்ட் பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்தார். மேலும், போலீஸாரிடம் வாதம் செய்தான் என ஒரு சிறுவனுக்கு சவுக்கடி கொடுத்தார்.

அந்தச் சிறுவன் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆங்கிலேயர் இருவர் மாண்டனர். இச்செயலுக்கு மேலும் பலர் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, மகான் அரவிந்தரும் அதில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் அலிப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.

அப்போது சென்னையில் இருந்த ஏர்லி நார்டனை அந்த வழக்கில் ஆஜராவதற்காக ஆங்கிலேய அரசு அழைத்துச் சென்றது. அதற்காக நார்டனுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000 வக்கீல் பீஸ் வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய தொகை. இவரும் அந்த வழக்கில் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக வாதாடினார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது.
இத் தகவல்களை மகான் அரவிந்தர் தனது "சிறைச்சாலையில் எனது நாட்கள்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, மந்தைவெளியில் உள்ள ஒரு தெருவுக்கு இவ்வாறு இரு முகங்களைக் காட்டிய நார்டனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒருபக்கம் இந்த வலிமை மிகுந்த உயர் நீதிமன்றத்துக்கு எதிராகத் தாக்குதலும் நடந்தேறின. சட்டமன்றத்துக்கும், நீதிமன்றத்துக்கும் பிரச்னைகள் ஏற்படும்பொழுது பலதரப்பான விவாதங்களும் விமர்சனங்களும் நடந்தேறின.

குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அழகிரிசாமியை அட்வகேட் ஜெனரலாக நியமித்தபோதும், அதன்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நில ஆர்ஜித வழக்கில் நீதிபதி சத்தியதேவ் தீர்ப்பு குறித்து சட்டமன்றத்தில் விவாதித்தபொழுதும், சட்டப்பேரவைத் தலைவராக பி.எச். பாண்டியன் இருந்தபொழுது நீதிபதி சிங்காரவேல் ஒரு கிரிமினல் வழக்கில் வழங்கிய தீர்ப்பை சட்டமன்றத்தில் ரத்து செய்தபோதும் - நீதித்துறையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களைப் பொருள்படுத்தாமல் உயர் நீதிமன்றம் அயராது தனது பணிகளைத் தொடர்ந்தது.

வழக்குரைஞர்கள் தங்களுடைய கடமைகளையும், பெருமைகளையும் விட்டுக்கொடுக்காமல், ஆங்கிலத்தில் Noble Profession, Learned Friend  என்று வழக்குரைஞர்களைக் குறிப்பிடுவதற்கு ஏற்றவாறு அந்தப் பண்புகளைக் கட்டிக்காத்த பாரம்பரியம் இந்த நீதிமன்றத்துக்கு உண்டு.
ஏர்லி நார்டனைக் குறிப்பிட்டதுபோல, வழக்குரைஞர்களாக இருந்த சி.பி. ராமசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், ராஜா ஐயர், எஸ். மோகன் குமாரமங்கலம், வி.கே. திருவேங்கட ஆச்சாரியார், கேசவ அய்யங்கார் (பராசரனுடைய தந்தையார்), வி.எஸ். எத்திராஜ், பராசரன், வி.பி. ராமன், கே. குட்டி கிருஷ்ண மேனன், எம்.கே. நம்பியார், சி.ஆர். பட்டாபிராமன், கோவிந்தசாமிநாதன், ஜி.ராமசாமி, என்.டி.வானமாமலை, கே.கே. வேணுகோபால், எஸ். செல்லசாமி, டி. செங்கல்வராயன், பி.ஆர்.டோலியே இப்படி கீர்த்தி பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரலாறு படைத்தனர் என்று சொல்வதைவிட, நீதித்துறையைத் தமிழகத்தில் மேம்படச் செய்தவர்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

இந்த நீதிமன்றத்தில் உலாவியவர்களில் மத்திய-மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு முக்கிய பொறுப்புகளைப் பெற்றவர்களும் உண்டு.
இன்றைய சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. அதில் 40 நிரந்தர நீதிபதிகள், 17 பேர் கூடுதல் நீதிபதிகளாவர். நீண்டகால போராட்டத்துக்குப் பின், நீதிபதி ஜஸ்வந்த் சிங்கின் பரிந்துரைக்குப் பின், 1985-லிருந்து வலியுறுத்தப்பட்டு தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 12 நீதிபதிகளோடு செயல்படுகிறது.
முதலில் தொடங்கிய மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று உயர் நீதிமன்றங்களும், அதே பேரில்தான் இன்றைக்கும் அழைக்கப்படுகின்றன. அந்த நகரங்களின் பெயர்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா என்று மாற்றப்பட்டாலும் இன்னும் நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.

இவையாவும் சார்ட்டட் ஐகோர்ட் என்று வழங்கப்படுகின்றன. இந்த மூன்று உயர் நீதிமன்றங்களுக்கும் மற்ற நீதிமன்றங்களைவிட சில அதிகாரங்கள் கூடுதலாக உள்ளன.

அதாவது, எல்.பி.ஏ. என்று சொல்லக்கூடிய Letters Patent Appeal என்ற இரண்டாவது மேல் முறையீடு என்ற சிறப்பதிகாரம் உண்டு. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்குகளை நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலேயே உள்ளது.
இப்படியான வரலாற்றுப் பதிவுகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பல உள்ளன. சாமானியர்களுக்கு நீதியை வழங்குகின்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆளுமைக்கு நாம் தலை வணங்குவோம். அதனுடைய நீதி பரிபாலனம் எந்நாளும் ஜனநாயகத்துக்கு வலு கூட்டட்டும்.
நன்றி : தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக