ஆசிரியர்கள் அநாகரிகமான முறையில் உடை அணிந்து பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ப.மணி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் சமுதாயத்தில் பல்வேறு நிலையில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாகப் பயில்கின்றனர்.
பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு உருவாகும் நிலையைத் தவிர்க்கவும், அனைவரும் சமநிலையில் உள்ளவர்கள் என்ற மனநிலையை உருவாக்கவும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டு வருகிறது.மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான ஆசிரியப் பணியில் உள்ள ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது கண்ணியமான முறையில் ஆடைகளை அணிய வேண்டும். ஆடை மற்றும் அணிகலன்கள் நமது பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் உகந்த முறையில் இருத்தல் மிகவும் அவசியம்.
கண்ணியக் குறைவாகவும், மாணவ, மாணவிகளிடையே ஏற்றத் தாழ்வையும், மனச் சலனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், மரியாதைக் குறைவையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உடை அணிவதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு சுற்றறிக்கைகள் இந்த இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இருந்தாலும், அண்மைக் காலங்களில் ஆங்காங்கே சில ஆசிரியர்களால் இந்த அறிவுரைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது இயக்குநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலை மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
பள்ளி மாணவ, மாணவிகளிடம் பாதிப்பையும், பொதுமக்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நிலை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது தமது பதவிக்குரிய கண்ணியத்துக்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையிலும், மாணவ, மாணவிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையிலும் ஆடைகளை அணிந்து வர வேண்டும்.
அநாகரிகமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறு ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் இதைக் கண்காணிக்க வேண்டும்.
இந்த அறிவுரைகளைப் பின்பற்றுவதில் தவறுகளோ, குறைபாடுகளோ சிறிதும் ஏற்படாவண்ணம் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணியக் குறைவாகவும், மாணவ, மாணவிகளிடையே ஏற்றத் தாழ்வையும், மனச் சலனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், மரியாதைக் குறைவையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உடை அணிவதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு சுற்றறிக்கைகள் இந்த இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
good info
பதிலளிநீக்கு