Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 30 ஜூன், 2012

பிரதமரின் கவலை :மருத்துவ கல்வியின் தரம்

இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.342 கோடியில் கட்டப்பட்ட குழந்தைகள், பெண்கள் மருத்துவமனை, பயிலகம், விடுதி கட்டடங்களைத் திறந்து வைத்தும், முதுகலை, இளங்கலை முடித்த 311 பேருக்குப் பட்டங்களை வழங்கியும் அவர் சனிக்கிழமை பேசியது:
 நாட்டு மக்களுக்குச் சுகாதாரத்தை அளிப்பதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறோம். சுகாதாரக் குறியீடுகள் மோசமாகத் தொடர்வதும், சிசு மற்றும் பிரசவகால மரணங்களும் கவலையளிக்கின்றன.
 பல ஆண்டுகளாகச் சுகாதார மற்றும் குடும்ப நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், இன்றைக்கும் மருத்துவச் செலவுகளுக்காக, 3-ல் இரு பங்குத் தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவிட நேர்கிறது.
 இதை சரி செய்யும் நோக்கில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம், சிசு மற்றும் பிரசவகால மரணங்கள் விகிதம் குறைந்தது. மருத்துவமனையில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களின் தேவைகள் பல நிறைவேற்றப்பட்டாலும், இன்னமும் இலக்குகள் பல இருக்கின்றன.
 இதனால், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. அதேபோல, நகர்ப்புற பகுதிகளில் சுகாதாரத் திட்டங்களை அமல்படுத்த, புதிய தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம் தொடங்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
 நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளின் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்பதற்குப் பதிலாக, 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்கிறது. ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்பதற்குப் பதிலாக, இரு மருத்துவர்களுக்கு 3 செவிலியர்கள் என்ற நிலையும் இருக்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண, மத்திய மற்றும் மாநில அரசுகள், குறிப்பாக மாநில அரசுகள் அந்தந்தப் பகுதிகளில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.


மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளது. மருத்துவக் கல்வி குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இந்நிலை தொடர அனுமதிக்கக்கூடாது. கல்வித்தரம் உயர்வதற்கு உதவியாக நம்பகமான கட்டுப்பாட்டு அமைப்பும், கல்விக்கூட அமைப்புகளையும் நிறுவ வேண்டியது அவசியம். அதேபோல, பாடத்திட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

 கிராமங்களிலும், உள்ளூர் சமுதாயத்தினரோடும் இணைந்து பணியாற்றுவதற்கேற்ப மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நோய்களைக் குணப்படுத்தும் பணியைவிட, நோய்த் தடுப்புப் பணிகளில் தங்களது பங்களிப்பை அதிகம் அளித்து, சமூகப் பங்களிப்பை நிறைவேற்ற வேண்டும்.
 இந்திய மருத்துவக் கவுன்சில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதோடு, சமூக மருத்துவம் சார்ந்த பயிற்சிகளையும் அனைத்து நிலைகளிலும் இணைத்து வருகிறது.
 நாட்டின் மருத்துவக் கல்வியைப் பலப்படுத்த பல்வேறு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இளநிலை, முதுகலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன.
 தேவையான இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
 பிரதம மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ், போபால், புவனேசுவரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் போன்ற 6 மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிகள் 2012-13ம் கல்வியாண்டிலும், மருத்துவமனைகள் 2013-14ம் கல்வியாண்டு முதலும் செயல்படத் தொங்கும் என எதிர்பார்க்கிறோம்.
 கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மேம்பாடு அடைவதற்கான திட்டத்தோடு புதுச்சேரி மாநிலம் செயல்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகிறது. இதற்காக புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறேன். நாட்டிலேயே உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வியில் சிறந்த மையமாக புதுச்சேரி மாநிலம் திகழ அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். மேலும், புதுச்சேரி மாநிலத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா மையமாக மேம்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வெளிக்கொணர, மத்திய சுற்றுலா அமைச்சகத்தோடு இணைந்து புதுச்சேரி அரசு செயல்பட வேண்டும் என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக