சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது புகார் எழுந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பான நேர்முகத் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 35 சத்துணவு அமைப்பாளர், 28 சமையலர், 153 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு மாவட்ட அளவில் ஜூலை 3-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நேர்முகத் தேர்வுக்கு கடிதம் வரப்பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 3-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
சத்துணவு திட்டத்தின் கீழ் வரப்பெற்ற விண்ணப்பங்களில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு தகுதி அடிப்படையில் 25 சதவீத பணியிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது தகுதியின் அடிப்படையில் 3 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும். ஊனத்தின் சதவீதம், பணிபுரிவதற்கான உடல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.
சத்துணவு பணியாளர்களுக்கான தேர்வு நேர்மையாகவும், முறையாகவும், நியாயமானதாகவும் மற்றும் அரசு விதிகளில் குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் நடத்தப்படும்.
சத்துணவு பணியாளர் காலியிடங்களுக்கு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றும் நபர்களிடம் பொதுமக்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். சத்துணவு பணியாளர் நியமனத்திற்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது புகார்கள் ஏதும் வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களை தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக