மழை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகர் ஷெனாய் நகர் பகுதிக்குட்பட்ட
கெஜலட்சுமி காலனி, கதிரவன் காலனி உள்ளிட்ட பகுதி மக்களை இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில்
சந்தித்து ஆறுதல் கூறி 3000 நபர்களுக்கு உணவை வழங்கினார். அவருடன் மாநில
பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம்
மக்கீ, எஸ்.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் கே.எம். நிஜாமுதீன், பேராசிரியர்
கே.டி. கிஸர் முஹம்மது, மத்திய சென்னை மாவட்ட தலைவர் யூசுப் குலாம்
முஹம்மது, உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அங்கு,
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- ‘’தமிழ்நாட்டில் பெருமளவு மழை பெய்துள்ளது.
குறிப்பாக வட தமிழகத்தில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய
மாவட்டங்களில் பெரும் இழப்பும்,வெள்ள சேதமும், அழிவும் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட
பல்வேறு சமூக மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்
நிர்வாகிகள் எல்லா இடங்களிலும் பள்ளிவாசல் ஜமாஅத்துகளோடு இணைந்து காலை,
மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு வழங்கி வருகிறோம்.
நேற்றைய
தினம் தென்சென்னை பகுதியான சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஆலந்தூர் பகுதிகளில்
உணவுகளை வழங்கினோம். இன்று மத்திய சென்னையில் வழங்கி வருகிறோம்.
நாங்கள்
உணவு வழங்கும் போது பொது மக்கள் சொல்வது என்னவென்றால் ஆட்சியாளர்களை விட
திமுகவினர் உதவிகளை அதிகளவில் செய்து வருகிறார்கள் என்றும் எங்களுக்கு உணவு
கிடைக்கிறது. அதே வேளையில் உடுத்த துணி இல்லை, படுக்க பாய் இல்லை, தேங்கி
நிற்கும் தண்ணீரால் கொசுக்கடி தாங்க முடியவில்லை என்று இப்படி பல குறைகளை
சொல்கிறார்கள். எனவே உடனடியாக தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு
போர்க்கால அடிப்படையில் உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
தமிழக முதல்வர் அவர்கள் ஆர்.கே. நகர் பகுதிக்கு சென்று வந்ததாக
பத்திரிகையில் பார்த்தேன். அவர் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும்
சென்றிருக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் பாதிப்புகளை அவர் முழுமையாக
கண்டறிந் திருக்க முடியும்.
வெள்ள
சேதத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார். இது போதாது
இன்னும் அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வளவு பெரிய சேதம் அழிவு
ஏற்பட்ட பிறகும் மத்திய அரசுக்கு நிவாரணம் குறித்து கடிதம்
எழுதவில்லை.நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை முதல்வர் பிரதமருக்கு
எழுதுவார். ஆனால் வெள்ள சேதங்கள் குறித்த ஒரு கடிதம் கூட எழுதவில்லை.
பாதிப்பு
இருக்கின்ற நேரத்தில் கடிதம் எழுதினால் மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய
பேரிடர் மேலாண்மைக்குழு, ஆய்வுக்குழு ஆகியவைகள் நேரில் வந்து ஆய்வு
செய்யும் பொழுதுதான் முழுமையான நிவாரணங்கள் கிடைக்கும். காலம் கடந்து
மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது ,தொலைபேசியில் பேசுவது முழு நிவாரணம்
கிடைக்காது.
மத்திய
அரசும் வழக்கம்போல் ‘யானை பசிக்கு சோலப்பொரி’ என்றில்லாமல் உடனடியாக
மத்தியக்குழுவை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகளவில் நிவாரண
உதவிக்கான தொகையை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்பொழுது
இடை விடாமல் மூன்று, நான்கு நாட்கள்தான் மழை பெய்துள்ளது. 10, 15 நாட்கள்
கூட இடை விடாமல் மழை பெய்திருக்கிறது. ஆனால் அப்போது எல்லாம் இப்படிப்பட்ட
வெள்ள சேதமும், அழிவும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக
அரசு எடுக்காத துதான் காரணம்.
ஏரிக்
குளங்களை சரிவர தூர் வாரவில்லை-கரைகளை மேம்படுத்தவில்லை-கால்வாய்களையும்
தூர் வாரும் பணிகளை செய்யவில்லை. வீராணம் ஏரி தூர் வாரும் பணியும்
நடைபெறவில்லை. அதனால்தான் ஏரி உடைந்து பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
165
இடங்களில் ஏரிகள் உடைந்துள்ளதாக கூறுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் ஒன்று
இரண்டு ஏரிகள் உடைவது சகஜம்தான். ஆனால் 165 ஏரிகள் உடைந்தது என்றால்
ஆளுங்கட்சியின் மெத்தன போக்கே ஆகும்.
ஆளுங்கட்சியை
காட்டிலும் திமுகவினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து
ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக மு.க.ஸ்டாலின்
பணி பாராட்டு கிறேன்.
தமிழ்
இந்து நாளேடு ஒரு கருத்து கணிப்பை எடுத்துள்ளது. இதுபோன்ற மழைக்காலங்களில்
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் ஆட்சியில் ஆற்றிய பணிகள் குறித்து
மக்களிடம் கருத்து கேட்டதில் 44 சதவீதம் பேர் திமுக ஆட்சியிலே சிறப்பாக
செய்தனர் என்று கருத்து தெரிவித் திருக்கிறார்கள்.
வானிலை
அறிக்கை வந்ததும் கலைஞர் ஒரு அறிக்கை கொடுத்தார். முன்னெச்சரிக்கை நடவடி
க்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். அவருடைய அனுபவத்தால் இதனை முன்
கூட்டியே தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு அலட்சிய படுத்தியதின் விளைவே
இவ்வளவு அழிவிற்கும் காரணமாகும். தேர்தல்
இன்னும் 6 மாதங்களில் வர இருப்பதால் நிவாரண உதவிகளை காலம் தாழ்த்தி வழங்கி
அதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கி கொள்ள தமிழக முதல்வர் முயன்று வருவதாக
செய்திகள் வருகின்றன.
இதனை
கைவிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில்
நிவாரண உதவிகளை வழங்கி அவருடைய வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று
தமிழக முதல்வரை கேட்டு கொள்கிறேன்.’’