Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

கல்வி செல்வத்தை அடைய கடன் பெறுவது எப்படி?

கல்வியே அழியாத செல்வம் என்பது தமிழில் ஒரு புகழ்பெற்ற முதுமொழி. ஆனால், நவீன காலத்தில், அந்த கல்வி செல்வத்தை அடைய, நிறைய செல்வத்தை நாம் இழக்க வேண்டியுள்ளது.

வசதியான வாழ்வுக்கும், நல்ல பணி வாய்ப்பை பெறுவதற்கும், தரமான உயர்கல்வி என்பது மிகவும் முக்கியம். ஆனால், அதைப் பெறுவதற்கு ஒருவர் அதிகம் செலவு செய்ய வேண்டுமென்பதால், வங்கிக் கடனை நோக்கி பலரும் செல்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, புரபஷனல் படிப்புகள் அனைத்திற்கும் கல்விக்கடன் பெறலாம். ஆனால், பல மாணவர்கள் சரியான வழிமுறை தெரியாமலும், வங்கிகளின் அலட்சியம் மற்றும் புறக்கணிப்பாலும் தங்களின் கல்விக் கடன் வாய்ப்புகளை இழக்கின்றனர். எனவே, அவர்கள் எளிதான முறையில் வங்கியில் கல்விக்கடனைப் பெறும் வழிமுறைகளை அறிந்துகொண்டால், அதன்மூலம் வீண் மன உளைச்சல் மற்றும் அலைச்சல் ஆகியவற்றை தவிர்க்க முடியும்.

தகுதி
வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, நீங்கள் அதற்கு தகுதியான நபரா என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, வங்கிகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி அவர்கள் தகுதியானவர்களா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான வங்கிகள், 16 முதல் 26 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குகின்றன. அதேசமயம், வங்கிகளுக்கு இடையில், கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி விதிமுறைகளில் வேறுபாடுகளும் உண்டு.

வங்கிகள் மற்றும் பல்கலைகள் இடையிலான ஒத்துழைப்பு
பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் போன்றவை, அவை தேசிய அல்லது சர்வதேச கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, வங்கிகள், நிதி அமைப்புகள் அல்லது கல்விக் கடன் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு, வட்டி விகிதம் குறைவு மற்றும் திருப்பி செலுத்துவதற்கான அதிக கால அவகாசம் போன்ற சலுகைகள் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. இத்தகைய சலுகைகள், மாணவர் சமூகத்தால் வரவேற்கப்படுபவைகளாக உள்ளன. ஏனெனில், அவர்கள் கடனை திரும்ப செலுத்துவதற்குள், ஒரு நல்ல பணி வாய்ப்பை பெறுவதற்கான அவகாசத்தைப் பெறுகின்றனர்.

உங்களின் தற்போதைய நிதிநிலை
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக, உங்களின் தற்போதைய சொந்த நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட்டுக் கொள்வது முக்கியம். கல்வி உதவித்தொகையைப் பெறுவதன் மூலம், உங்களின் செலவின சுமையைக் குறைக்கலாம். நீங்கள் படிக்கவிருக்கும் கல்வி நிறுவனம் மற்றும் உங்களின் விருப்ப படிப்பு ஆகியவற்றை தேர்வு செய்தவுடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உங்களுக்கான கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் குறித்து விசாரிக்கலாம்.

கல்விக் கடனை திரும்ப செலுத்துதல்
நீங்கள் தேர்வுசெய்யும் படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிறகு, உங்களுக்கான பணி வாய்ப்புகள் எப்படி மற்றும் அதில் கிடைக்கும் ஆரம்பநிலை சம்பளம் ஆகியவை பற்றி ஆராய வேண்டும். கல்விக் கடன் வழங்கும் பல வங்கிகள், கடனை திருப்பி செலுத்த 10 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கின்றன.

அதேசமயம், கல்விக் கடனை எந்தளவிற்கு விரைவாக திருப்பி செலுத்துகிறோமோ, அந்தளவிற்கு ஒரு மாணவரின் நிதி ஆதாரம் சேமிக்கப்படுகிறது. ஏனெனில், அவர் கட்டும் தேவையற்ற வட்டியின் அளவு குறைகிறது. நீண்டகாலம் ஒரு கடனை திருப்பி செலுத்துகையில், நாம் அதிகளவு வட்டி கட்டியிருப்போம் என்பதையும் நினைவில் கொள்க.

மேலும், நீங்கள் படிப்பு முடிந்து ஆரம்ப கட்டத்தில் பெறுகின்ற பணி வாய்ப்பில் பெறுகின்ற சம்பளம் மற்றும் அடுத்தடுத்த காலகட்டங்களில் உங்களின் சம்பளம் எந்தளவு அதிகரிக்கும் என்பதை விசாரித்து தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான், நீங்கள் கல்விக்கடனை எப்படி திருப்பி செலுத்தலாம் என்பதை திட்டமிட முடியும்.

கடன் தரும் நிறுவனங்கள்
தனக்கான கல்விக் கடனை பெறும் முயற்சியில் ஒரு மாணவர் ஈடுபடுகையில், அவர் பலவிதமான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் பற்றி கேள்விப்படுவார். அந்த பலவிதமான நிறுவனங்களில், தனக்கு ஒத்துவரக்கூடியது எது என்பதை நன்கு யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

ஏனெனில், இந்த முயற்சியில் மாணவர்கள் சில மோசடி நிறுவனங்களையும் சந்திக்க நேரலாம். குறைந்த வட்டி விகிதம் உள்ளிட்ட பல போலியான சலுகைகளை வழங்குவதாக கூறி, அவை மாணவர்களை ஏமாற்ற முயலலாம். எனவே, ஒரு மாணவருக்கான கல்விக்கடன் பெறும் தகுதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுவான நடைமுறையில் வங்கிகள் என்ன மாதிரியான சட்ட திட்டங்களைக் கொண்டுள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

போதுமானதாக இருத்தல்
நீங்கள் வாங்கும் கல்விக்கடன் உங்களின் அவசியமான தேவைகளை நிறைவுசெய்வதாக இருக்க வேண்டும். புத்தகங்கள், பயணச் செலவுகள், விடுதி கட்டணம், உணவு மற்றும் தனிப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட பல அத்தியாவசிய அம்சங்களுக்கான செலவினங்கள், உங்களின் கல்விக்கடன் தொகைக்குள் அடங்க வேண்டும். அதேசமயம், உங்களுக்கு தேவைப்படும் தொகையைவிட அதிகமாக, கல்விக்கடனைப் பெற வேண்டாம். ஏனெனில், திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

பொறுப்பாளர்
ஒரு வங்கி அல்லது கல்விக்கடன் தரும் ஒரு நிறுவனம், கல்விக்கடன் கோரும் மாணவருடன் சேர்த்து, அவரின் தாய் அல்லது தந்தை அல்லது உடன் பிறந்தோர் ஆகிய யாரேனும் ஒருவரை co-applicant -ஆக இருக்க வலியுறுத்துகிறது. ஏனெனில், பெற்றோர் அல்லது உடன் பிறந்தோரின் தற்போதைய வருமானம் வங்கிகளால் கணக்கில் எடுக்கப்படுகிறது.

ஏனெனில், வங்கிக் கடன் பெற்ற மாணவரால், சரியான காலத்தில் பணி வாய்ப்பைப் பெற்று, கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்படும்போது, co-applicant அதற்கான பொறுப்பை ஏற்கும் நிலை ஏற்படும்.

பிணையம்
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கல்விக்கடன் பெற விரும்புவோர், அதற்கேற்ப செக்யூரிட்டி(security) வைத்திருப்பது அவசியம். அதுவொரு சொத்தாகவோ, பங்குகளாகவோ அல்லது முதலீடாகவோ இருக்கலாம். இதன்மூலம், சிறப்பான வட்டி விகிதத்தில் கல்விக்கடன் பெற முடியும்.

தேவையான ஆவணங்கள்
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக, தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும். கல்விக் கடன் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்களை, விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிறுவனங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக, அடையாளச் சான்று, வயது மற்றும் முகவரி சான்று, co-applicant -ன் உறவுமுறைக்கான அடையாளம், அவர்களின் முகவரிச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவையே பெரும்பாலான இடங்களில் கோரப்படுகிறது. மேலும், நீங்கள் சேரப்போகும் கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட சேர்க்கை கடிதம் மற்றும் கட்டண விபரங்களும் இருக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்பவராக இருந்தால், visa approval papers மற்றும் GMAT, SAT, GRE ஆகிய தேர்வுகளின் மதிப்பெண்கள் போன்றவையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

திருப்பி செலுத்துதல்
கல்விக் கடனை எந்த முறையில் திருப்பி செலுத்தலாம் என்பது குறித்து, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவு செய்யலாம். மாதாந்திர தவணையாகவா அல்லது சிறியளவிலான வட்டித் தொகையுடனா அல்லது நிறுத்தி வைப்பா என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.

சிறியளவிலான வட்டித்தொகை செலுத்துதல் மாதாமாதம் ஒரு தொகை செலுத்துதல் ஆகிய முறைகள், நீங்கள் பட்டம் பெற்றவுடன் உங்களின் சுமையைக் குறைப்பதாக இருக்கும். ஆனால், நிறுத்தி வைப்பு என்ற நிலைக்கு செல்ல வேண்டாம் என்பதே பொதுவாக அறிவுரை.

திங்கள், 21 ஜூலை, 2014

ஜூலை25 ரமளான் கடைசி வெள்ளி "அல்குத்ஸ்" தினம் பலஸ்தீன முஸ்லிம்களை பாதுகாக்க புனித பைத்துல் முகத்தஸை மீட்க அல்லாஹ்விடம் மன்றாடுவோம்! --- பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன்

உலக முஸ்லிம்களின் முதல் கிப்லா "பைத்துல் முகத்தஸ்"- மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்று. இறுதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விண்வெளி பயணம் தொடங்கிய இடம் - பலஸ்தீன் நபிமார்கள் நடமாடிய பூமி.

எனவேதான் பலஸ்தீன், பைத்துல் முகத்தஸ், ஜெருசலம் - உலக முஸ்லிம் களின் பிரச்சனை! இதை உணர்த்தவும், இஸ்ரேலிய யூத நாசகார சக்தி களிடமிருந்து மீட்டெடுக்கவும் ரமளான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை
"அல் குத்ஸ்" தினமாக உலக முஸ்லிம் களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு புனித ரமளான் மாதத்தை யுத்த காலமாக்கி அப்பாவி பலஸ்தீனர்களை வேட்டையாடி வருகிறது இஸ்ரேல். காஸாவில் கடந்த இருவாரங்களாக வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலில் 337 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், உயிரிழப்பு அதிகம். தரைமட்டமாக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளை அப்புறப்படுத் தினால்தான் சரியான எண்ணிக்கை தெரிய வரும். ஆனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில்!

"இஸ்ரேலின் மிருகவெறித் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள்" என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா. சபையின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களில் அடுத்த தலைமுறை வளரக் கூடாது என்றே யூத சக்திகள் திட்டமிட்டு இதனை செய்கின்றன.

முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமை இல்லை - ஐரோப்பிய நாடு கள் மவுனம் சாதிக்க, இஸ்ரேல் தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதனால் ஐ.நா. சபை செயலிழந்து கிடக்கி றது.பலஸ்தீனத்தை இந்தியா உறுதியாக ஆதரித்த நிலை மாறி - இஸ்ரேல் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கூட இன்றைய மத்திய அரசு சம்மதிக்க மறுக் கிறது.இதுதான் அரசியல் மாற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டி ருக்கும் அலங்கோலம்!

எனவே, இப்போது ஒரே நம்பிக்கை எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடுவதுதான். பலஸ்தீனர்களின் உயிர் காக்க புனித பைத்துல் முகத்தஸை யூதர்களிடமிருந்து மீட்க ரமளான் கடைசி வெள்ளியான ஜூலை 25 ,ஜும்ஆ தொழுகையின்போது அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்து அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சுவோம்.

துஆகள் தோற்பதில்லை அல்லவா!

பலஸ்தீனத்தை மையப்படுத்தி அன்றைய தின குத்பா உரை நிகழ்த்த சங்கைக்குரிய உலமா பெருமக்களை அன்புடன் வேண்டு கிறோம் என்று  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது அறிக்கையில் கூறியுள்ளார் .

சனி, 19 ஜூலை, 2014

இஸ்ரேல் தீவிரவாதிகள் தாக்குதல்: காஸாவில் உயிரிழப்பு 300-ஐ தாண்டியது

காஸா மீது இஸ்ரேல் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இதனால், காஸாவில் 12ஆவது நாளாக இஸ்ரேலின் தீவிரவாதிகள் நடத்தி வரும் கடும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.

இஸ்ரேல் தீவிரவாதிகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடந்த 8ஆம் தேதி முதல் கடும் போர் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலின் தீவிரவாதிகள்  விமானப்படை, கடற்படை மற்றும் பீரங்கிப்படை என முப்படைகளும் குழந்தைகள் ,பெண்கள் ,வயதானோர் என்று பாராமல்  காஸா மீது இரவு பகலாக குண்டுகளை வீசி கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதற்கு பதிலடியாக,இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரை குறிவைத்து காஸா பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் போராளிகள்  தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 காஸாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2,200 பேர் காயமடைந்துள்ளதாகவும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 9 மே, 2014

கடையநல்லூர் அல் - ஷபா ஹமீது +2 தேர்வில் 1168 மதிப்பெண் பெற்று சாதனை

கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி மாணவன் அல் - ஷபா ஹமீது +2 தேர்வில் 1168 சாதனை படைத்துள்ளார் .

 கடையநல்லூரில் சாதனை படைத்த  மாணவ, மாணவிகள்.....
முதலிடம் அல் ஷபா ஹமீது 1168
இரண்டாம் இடம் வத்ஸலா - 1137
மூன்றாமிடம் முஹம்மது முஸம்மில் - 1135
மூன்றாமிடம் ஆகாஷ் மாரி - 1135

முதலிடம் பெற்ற ஷபா ஹமீதை ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி செய்யது முஹையதீன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அஸ்கர் அலி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது, ஆசிரியர் அஷ்ரப் அலி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவனின் தந்தையுமான  அல் - அமீன் மற்றும் ஆசிரியர்கள்  , சக மாணவர்கள் வாழ்த்தினர்

வியாழன், 8 மே, 2014

பொறியியல் படிப்புகளும் அதற்கான வேலைவாய்ப்புகளும்

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் 30-க்கும் மேற்பட்ட பொறியியல் படிப்புகள் உள்ளன. எந்தப் படிப்புகளையும் தேர்வு செய்வதற்கு முன்னதாக அந்தப் படிப்புகள் குறித்த விவரங்களை மாணவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.
மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் சில என்ஜினீயரிங் படிப்புகள் குறித்த சிறிய அறிமுகம் .......

   

எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிக்கேஷன்ஸ்
என்ஜினீயரிங் படிக்க விரும்பும் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பம், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்ஸ். இந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படிப்பதால் எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிக்கேஷன்ஸ் துறைகளில் மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தங்களது முத்திரையைப் பதிக்கலாம் என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படித்து தங்களது வேலைவாய்ப்புத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளவே பல மாணவர்கள் விரும்புகிறார்கள். எனவே, எந்தப் பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் இப்படிப்பில் சேருவதில்தான் மாணவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்பது வெளிப்படை. எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரான் டிவைசஸ், சிப் டிசைன், சாஃப்ட்வேர் புரோகிராமிங், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், கம்ப்யூட்டர் கம்யூனிக்கேஷன், டிரான்ஸ்மிஷன் லைன்ஸ், நெட் ஒர்க்கிங், ஆப்டிக்கல் கம்யூனிக்கேஷன், கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மைக்ரோ புராசசர், மைக்ரோவேவ் என்ஜினீயரிங்...இப்படி பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் படிப்பை முடித்துவிட்டு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் மாணவர்களைவிட, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைப் பணிகளில் சேரும் மாணவர்களே அதிகம்.

    மெக்கானிக்கல்
பொறியியல் பாடப்பிரிவுகளில் முக்கியமான துறை இது. அண்மைக்காலமாக இந்தப் படிப்பில் சேர பல மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர  சாதனங்கள், பொருள் உற்பத்தி முறைகள், பொறியியல் வடிவமைப்பு, கம்ப்யூட்டர் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கியது இப்பாடப்பிரிவு. படிப்புக் காலம் மற்ற பொறியியல் படிப்புகளைப் போல 4 ஆண்டுகள்தான். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சாண்ட்விச் படிப்புக்கு மட்டும் ஓராண்டு கூடுதலாக (5 ஆண்டுகள்) படிக்க வேண்டும்.
இந்த ஓராண்டில் மாணவர்கள் தொழிற்சாலைகளில் நேர்முகப் பயிற்சி பெறுவார்கள். இதனால், சாண்ட்விச் படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சாத்தியங்கள் அதிகம். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு அரசுத் துறை நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தனியார் துறை நிறுவனங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்

இது கம்ப்யூட்டர் யுகம். இந்த மகத்தான கண்டுபிடிப்பு மனித வாழ்வின் சகல அம்சங்களிலும் ஊடுருவி தனது முக்கியத்துவத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்புக்கு இவ்வளவு மவுசு இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. படித்து முடித்த திறமையாளர்களுக்கு உடனடி வேலை, கை நிறைய ஊதியம் என்றால் யாருக்குத்தான் இனிக்காது. எனவேதான், இத்துறையை நோக்கி புற்றீசல் போல மாணவர்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரமாண்டமான வளர்ச்சி இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டுவேர், புரோகிராமிங் மொழிகள், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், கம்ப்யூட்டர் வரைவியல், கம்ப்யூட்டர் பொறியியல், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற கம்ப்யூட்டர் துறைக்குத் தேவையான முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. அதாவது கம்ப்யூட்டர் வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள் ஆகிய துறைகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்துறை மந்தநிலை போன்ற தாற்காலிகப் பிரச்சினைகள் வந்து போனாலும்கூட, இந்தப் படிப்பைப் படித்த திறமையான மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி(IT)
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்கிற்கும் ஐ.டி. என்று அழைக்கப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிப்புக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் இல்லை. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் துறையின் உடன் பிறப்பு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. கம்ப்யூட்டர் தகவல் தொடர்பான தொழில்நுட்பங்களும் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்தத் தொழில்நுட்பங்களைக் கையாளுவது குறித்தும் உள்ள படிப்புதான் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் முக்கிய விருப்பப் படிப்புகளில் இதுவும் ஒன்று. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்த திறமையான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்குப் பஞ்சமில்லை!

    எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் 
எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின் உற்பத்தி அமைப்புகள், மின் ஆற்றல் பகிர்வு உள்பட எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் தொடர்பான பாடப்பிரிவுகளைக் கொண்டது இப்படிப்பு. எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு  மின் துறை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பைப் படித்துவிட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

    சிவில் என்ஜினீயரிங்
பொறியியல் துறையின் முன்னோடிப் படிப்பு சிவில் என்ஜினீயரிங். கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், வடிகால்கள், துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதில் சிவில் என்ஜினீயர்களின் பங்கு முக்கியமானது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது இருப்பதால், சிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கான தேவை என்பது தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே துறை என்று பெரும்பாலும் அரசுப் பணிகளையே சிவில் என்ஜினீயர்கள் நம்பி இருக்க வேண்டியதிருந்தது. இப்போது திறமையான சிவில் என்ஜினீயர்களுக்கு தனியார் கட்டுமானத் தொழில் நிறுவனங்களிலும் நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்து வருகிறது.

    மெகட்ரானிக்ஸ்
காலத்திற்கேற்ற வகையில் உருவாகி வரும் புதிய பொறியியல் படிப்புகளில் ஒன்று மெகட்ரானிக்ஸ். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையில் எலெக்ட்ரானிக்ஸ் துறையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து,  மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளின் இணைவுதான் மெகட்ரானிக்ஸ். உற்பத்தித் தொழில்நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழில்நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. 

    ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்
ஒரு காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் ஒரு பகுதியாக இருந்த ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் தற்போது தனித் துறையாக வளர்ந்து விட்டது. வாகன அமைப்பு உருவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. நேர்முகப் பயிற்சிக்கும் இப்படிப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்கள், ஆட்டோமொபைல்  உற்பத்தி நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் ஆய்வு நிறுவனங்களிலும்  வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்திய ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால், இத்துறையில் படித்த பொறியாளர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

    ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்
விமானங்களை வடிவமைப்பதிலும் உருவாக்குவதிலும் அதனைப் பராமரிப்பதிலும் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்த பொறியாளர்களின் பங்கு முக்கியமானது. செயற்கைக்கோள், ஏவுகணை, ராக்கெட் என இப்பாடப்பிரிவின் எல்லைகள் விரிவடைந்து வருகின்றன. அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், விமான வடிவமைப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வுத்துறை, பாதுகாப்புத்துறை போன்ற பல்வேறு துறைகளில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    பயோ டெக்னாலஜி
இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கியத்துறை பயோ டெக்னாலஜி. விவசாயம், மருந்துப் பொருள்கள், பதனீட்டு உணவுகள், ஜவுளித்துறை...இப்படி இதன் பயன்பாடு விரிந்து வருகிறது. எனவே, இதுகுறித்த படிப்புகள் உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பயோ டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், வேளாண் தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவு பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை, அமைப்புகள், பயோ எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், பயோ டெக் ஆய்வு  நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சமீபகாலமாக விப்ரோ, டி.சி.எஸ். இன்போசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட பி.டெக். பயோ டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.

    இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்
இது தொழில் யுகம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காக தற்காலத் தொழில்துறையினரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார் செய்வதற்காக இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் போன்ற பிரத்யேகப் பட்டப்படிப்புகள் தேவைப்படுகின்றன. தொழிற் சாலைகளில் உள்ள இயந்திரங்களையும் பணிபுரியும் மனிதர்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்று கற்றுத்தரும் படிப்பு இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையைப் போன்றதே இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் துறை என்றாலும், தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களின் உற்பத்தி முறைகள், அதற்குப் பயன்படும் சாதனங்கள், அவற்றை ஆராய்ந்து தெரிவு செய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள், கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் போன்றவை இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்கில் கற்றுத் தரப்படுகின்றன. அரசுத் துறை, தனியார் துறை தொழிற்சாலைகளிலும் கன்ஸல்டன்சி நிறுவனங்களிலும் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன்
எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான படிப்புகளுடன் மின்னணு தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பற்றிய படிப்புதான் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன். எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான சாதனங்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதையும்,  அவற்றின் செயலாக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இப்படிப்பு மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். தொழில் நிறுவனங்கள், மின் நிலையங்கள், உரம் மற்றும் இரும்பு, ரசாயன ஆலைகளில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    கெமிக்கல் என்ஜினீயரிங்
கெமிக்கல் என்ஜினீயரிங் தவிர்க்க முடியாத முக்கியத் துறை. உரம், பெட்ரோலியப் பொருட்கள், சிமெண்ட், மருந்துகள், பெயிண்டுகள், செயற்கை நூலிழைகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தேவையான இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில்நுட்பங்களை உருவாக்குவது உள்ளிட்டவை இப்படிப்பின் முக்கிய அம்சங்கள். மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் இருக்கும். நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வுக் கழகத்தில் (செக்ரி) கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங் படிப்பைப் படிக்கலாம். பெட்ரோலிய, எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பார்மாசூட்டிக்கல்ஸ், உரத் தொழிற்சாலைகள், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள், பெயிண்ட் மற்றும் காகித உற்பத்தி நிறுவனங்கள், ஃபுட் புராசசிங் நிறுவனங்கள், ரசாயன ஆலைகள் போன்றவற்றில் கெமிக்கல் என்ஜினீயரிங் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். அத்துடன் விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்புத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.

    மெரைன் என்ஜினீயரிங்
பயணிகளுக்கான கப்பல்கள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவற்றின் இயக்கம் குறித்த பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது இப்படிப்பு. கப்பலில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு சாதனங்களை இயக்கவும் பழுதுபார்க்கவும் கற்றுத் தரப்படும். இப்பாடப்பிரிவு மாணவர்களுக்கு கப்பலில் நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, போதிய  உடல் தகுதியும், உரிய பார்வைத் திறனும் இருக்க வேண்டும்.

    மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங்
பல்வே உலோகத்தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், செம்மைப் படுத்துதல், உலோகங்களைக் கலந்து உலோகக் கலவைகளை உருவாக்குதல், வடித்தெடுத்தல் உள்பட உலோகவியல் பொறியியல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படும். அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றில் இப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

    என்விரான்மெண்டல் என்ஜீனீயரிங்
உலகமெங்கும் சுற்றுச்சூழல் குறித்த விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று வரும் காலம் இது. எனவே, என்விரான்மெண்டல் என்ஜினீயரிங் எனப்படும் சுற்றுச்சூழல் பொறியியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து, இயற்கை வளத்தைப் பேணுவதற்கான வழிமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் கற்றுத் தரும் படிப்பு இது. காற்று மாசுபடுதலைத் தடுத்தல், தொழிற்சாலை சுகாதாரம், கதிர்வீச்சுப் பாதுகாப்பு, நச்சுக் கழிவு மேலாண்மை, நச்சுப் பொருட்கள் கட்டுப்பாடு, கழிவு நீர் மேலாண்மை, திடக் கழிவுப் பொருள் அகற்றம், பொது சுகாதாரம், நில மற்றும் நீர் மேலாண்மை குறித்து இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகளிலும் அரசு சாரா அமைப்புகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளராகலாம்.

    அக்ரிகல்ச்சர் அண்ட் இரிகேஷன் என்ஜினீயரிங்
விவசாய உற்பத்தி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப முறையில் தீர்வு காண உதவுவது இந்தப் படிப்பு. விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க பொறியியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் படிப்பு கற்றுத் தருகிறது. களப்பணி செய்யத் தயாராக இருப்பவர்கள் இந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம். வேளாண்மைத் துறையிலும் வேளாண் தொழில்நுட்பத் துறையிலும் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு இது. அரசுத் துறை நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது. தோட்டக் கலை பண்ணைகள், கூட்டுறவு சங்கங்கள், வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், உரம் மற்றும் நீர்ப்பாசனக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் போன்ற இடங்களிலும் வேலை கிடைக்கும்.

    பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்
பொறியியலும் மருத்துவமும் சேர்ந்த படிப்பு இது. மருத்துவக் கருவிகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் கருவிகளின் இயக்கத்திற்குத் தகுந்தபடி மென் பொருள் உருவாக்கம் போன்ற பல்வேறு துறைகளில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களின் பங்கு முக்கியமானது. செயற்கை முறையில் இயங்கும் வகையில் உடல் பாகங்களை உருவாக்குவதிலும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களின் பங்கு இருக்கும். கிளினிக்கல் என்ஜினீயரிங், திசுக்கள் மற்றும் மரபு வழி பொறியியல், மெடிக்கல் இமேஜிங், மறுவாழ்வு பொறியியல், உடல் கூறு முறைகள், பயோ மெக்கானிக்ஸ், பயோ மெட்டீரியல்ஸ் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள் இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. மருத்துவ மனைகளில் கருவிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தவும் அதை, தொடர்ந்து பராமரிக்கவும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் மருத்துவக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.

    பிரிண்டிங் டெக்னாலஜி
பல்வேறு வகையான அச்சிடும் முறைகள், நவீன அச்சுத்துறையில் கம்ப்யூட்டரின் பங்கு, மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்கள் பிரிண்டிங் டெக்னாலஜி பட்டப் படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், பேக்கேஜ் பிரிண்டிங் பிரிவுகள், அச்சக இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அச்சகங்கள், இ-பப்ளிஷிங் நிறுவனங்கள் போன்ற இடங்களில் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    லெதர் டெக்னாலஜி
தோல் பதனிடுதல், காலணிகள் மற்றும் தோலாடைகள் உள்ளிட்ட தோல் பொருள்களை உற்பத்தி செய்தல், அதற்கு பயன்படும் சாதனங்களை இயக்குதல் உள்ளிட்ட தோல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தோல் பதனீட்டுக் கூடங்கள், தோல் பதனீட்டுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் ஆலைகள், தோல் ஆய்வு நிலையங்கள், தோல் தொழில் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற இடங்களில் இப்படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தோல் உற்பத்தித் துறையில் முக்கிய நாடாக விளங்கும் நமது நாட்டின் தோல் பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 60 சதவீதம் ஏற்றுமதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, திண்டுக்கல் போன்ற நகரங்கள் தோல் பதனீட்டுத் தொழிலிலும், தோல் உற்பத்தித் தொழிலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழுகின்றன. எனவே, இந்தப் படிப்பைப் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை இல்லை.

    டெக்ஸ்டைல் டெக்னாலஜி
துணி உற்பத்தித் தொழில்நுட்பங்களுடன் அதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், பராமரிப்பு, நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களைக் கற்றுத் தரும் படிப்புதான் டெக்ஸ்டைல் டெக்னாலஜி. நூல் தயாரிப்பு, நூல்களை வெண்மையாக்குதல், மிளிர வைத்தல், ஆடை உருவாக்கம், சாயம் போடுதல், செயற்கை இழைகளைத் தயாரித்தல் உள்ளிட்ட ஜவுளித் தொழில்நுட்பங்கள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. அத்துடன் டெக்ஸ்டைல் துறையில் கம்ப்யூட்டரின் பயன்பாடு குறித்த தொழில்நுட்பங்களும் கற்றுத் தரப்படுகின்றன. டையிங், ஃபினிஷிங், டெக்னிக்கல் சர்வீசஸ், ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட், குவாலிட்டி கண்ட்ரோல், புராடக்ட் டெவலப்மெண்ட் என டெக்ஸ்டைல் தொழில் நிறுவனங்களில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். ரிலையன்ஸ், பாம்பே டையிங், நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன், ஸ்ரீராம் பைபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? --- 2014 ; பட்டு உற்பத்தி துறையில் பொறியியல் படிப்பு

சில்க்(பட்டு) தொழில்நுட்பம் என்பது, பட்டு உற்பத்தியைப் பற்றி படிப்பதாகும் மற்றும் இத்துறை டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் துறையின் கீழ் வருகிறது.

பட்டுப் புழுக்கள் மற்றும் ரசாயன பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளின் மூலமாக, பட்டு உற்பத்தி செய்யப்படுவதன் வழிமுறைகள் குறித்து இப்படிப்பு கற்றுத் தருகிறது.

பட்டு என்பது ஒரு இயற்கையான இழையாகும். உலகத்தின் பழைய இயற்கை இழைகளுள் பட்டும் ஒன்றாகும். பிற இழைகளைவிட, இதற்கான முக்கியத்துவம் கூடுதலானது. முந்தைய காலங்களில், பட்டு உற்பத்தி செய்ய, பட்டுப் புழுக்கள் மட்டுமே, ஒரே ஆதாரமாக பயன்படுத்தப்பட்டன.

ஆனால், பிற்காலங்களில், பல்வேறான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சிக் காரணமாக, பட்டுத் தயாரிப்பில் புதிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் விளைவாக, செயற்கை பட்டு இழைகள் உற்பத்தியும் தொடங்கியது.

பட்டு இழைகளுக்கு அதிகரித்திருக்கும் தேவை காரணமாக, இந்திய அரசு, சில்க் டெக்னாலஜி இன்ஜினியரிங் என்ற படிப்பை தொடங்கியுள்ளது. பல கல்லூரிகளில் இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பின் நோக்கம், எப்போதும் வளர்ந்துகொண்டிருக்கும் பட்டு சந்தையை திறமையாக நிர்வகிக்கும் வகையில் நிபுணர்களை உருவாக்குவதேயாகும்.

தகுதிதங்களின் பள்ளி மேல்நிலைப் படிப்பை, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வகையில் படித்து நிறைவுசெய்துள்ள மாணவர்கள், இப்படிப்பில் சேர்வதற்கு தகுதியுடையவர்கள்.

பட்டு தொழில்நுட்பத்தின் பாடங்கள்

Fiber Science
Yarn manufacture, yarn structure and properties
Fabric manufacture and fabric structure
Textile testing Dyeing

வாய்ப்புகள்
பட்டு தொழில்நுட்பத்தில் ஒருவர் தனது பி.டெக்., படிப்பை நிறைவுசெய்த பின்னர், பணிக்கு செல்லலாம் அல்லது அதே துறையில் எம்.இ., அல்லது எம்.டெக்., படிப்புகளை மேற்கொள்ளலாம்.

இத்துறையில், பி.டெக்., முடித்த ஒரு இளநிலைப் பட்டதாரிக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. அவை,
* கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர்
* தொழில்நுட்ப விற்பனை பிரதிநிதி
* மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியர்
* ஆபரேஷன்ஸ் பயிற்சி பெறுபவர்
* தொழில்நுட்ப நிபுணர்
* செயல்பாட்டு பொறியாளர்
* ஆராய்ச்சியாளர்

இத்துறையில் பணி வாய்ப்புகளை வழங்கும் சில முக்கிய நிறுவனங்கள்
மைசூர் சில்க் பேக்டரி
சில்க் மார்க்
கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ்
பாம்பே டையிங்
அரவிந்த் மில்ஸ் லிமிடெட்
ஜே.சி.டி. லிமிடெட்
லக்ஷ்மி மிஷின் ஒர்க்ஸ்
லக்ஷ்மி மில்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ஒரு முஸ்லிம் நீதிபதி உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதை தடுக்க முயலும் பாசிச சக்திகள் --- எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் தகுந்த நியாயம், நீதி கிடைக்க வேண்டுமா? நம் நாட்டு மக்களின் இறுதி நம்பிக்கையாக இருப்பது நீதிதுறைதான். அந்த நீதி துறையிலேயே அதர்மம் தலைதூக்கினால் தர்மத்தையும் நியாயத்தையும் நிலைநாட்ட நாம் எங்கே செல்வது? யாரிடத்தில் சொல்வது?

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம் குறித்த பல்வேறு செய்திகள் அண்மைக் காலமாக உலாவந்து கொண்டிருக்கின்றன. நீதிபதிகள் நியமனம் குறித்து பாரம்பரியமிக்க கடந்த சில நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் மிகுந்த வேதனைக்குரியதாக அமைந்துள்ளன.

பாரபட்சம் தலைதூக்குகிறது; சமூக நீதி புறக்கணிக்கப்படுகிறது; தர்மம் ஒளிந்து கிடக்கிறது; நியாயம் தொலைந்து போய்விட்டது; நீதி தலைகுனிந்துவிட்டது என்றெல்லாம் நீதிபதிகளின் நியமனம் குறித்து பலதரப்பு விமர்சனங்கள் உருவாகியிருக்கின்றன. இதனால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நீதிமன்ற புறக்கணிப்புகள் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களே முன்னின்று நடத்தி வருவதை ஊடகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

மாண்புமிகு நீதிபதிகளின் பெயரிலேயே வருந்தத்தக்க வார்த்தைகளால் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அரசியல் சாசனம் வகுத்துப் பகுத்துக் காட்டிய மத, இன, சமூக அடிப்படையிலான உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு சிறுபான்மை இன மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்கிற பகிரங்க குற்றச்சாட்டுக்கு நீதித்துறை என்ன பதில் சொல்லப் போகிறது?

இந்த விஷயத்தில் அரசு மவுனம் சாதிக்கக்கூடாது. மதச்சார்பற்ற அரசு என்பதற்கான வெளிப்பாடு நீதித் துறையிலேயே கிடைக்கவில்லையானால், வேறு எந்தத் துறையில் கிடைக்கப் போகிறது?

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு காலத்தில் 25 ஆக இருந்தபோது 2 அல்லது 3 நீதிபதிகள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திலிருந்து இடம் பெற்றிருந்தனர். அந்த மொத்த எண்ணிக்கை கால ஓட்டத்தில் 25 ஆக மாற்றப்பட்டு அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு 60 ஆக உயர்த்தப்பட்ட போதும் அதற்கேற்ப முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை உயரவில்லை. அதே 3 முஸ்லிம் நீதிபதிகள்தான்.

நீதியரசர் இப்ராஹிம் சலீபுல்லாஹ், நீதியரசர் கே.என். பாஷா ஆகிய இருவர் வழக்கறிஞர்கள் மத்தியிலிருந்தும் நீதியரசர் எம். அக்பர் அலி அவர்கள் பணி உயர்வு மற்றும் தகுதி அடிப்படையில் மாவட்ட நீதிபதிகளுக்கான ஒதுக்கீட்டிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

2010 ல் நீதியரசர் இப்ராஹிம் கலீபுல்லாஹ் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். 2011 ல் இவரால் காலியான ஓர் இடத்தை நிரப்ப ஒரு முஸ்லிம் நீதிபதியை நியனம் செய்யும் வகையில் மதுரையைச் சார்ந்த மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்களை அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் அவர்கள் பரிந்துரைக்க, ஆதிக்க சக்திகளின் சதித்திட்டத்தால் அவரின் பெயர் நீதிபதிகளின் நியமனப் பட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்காக ஒரு வழக்கில் இவர் வாதாடினாராம். அதுதான் இவர்மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டாம். தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஒரு குற்றமும் செய்யாத அப்பாவியாகக்கூட இருக்கலாம். அவரின் நியாயத்தை எடுத்துக்கூற, நியாயத்தை எடுத்தியம்ப இந்த வழக்கறிஞர் முயன்றது தவறா?

2013 ஏப்ரல் மாதத்தில் நீதியரசர் கே.என். பாஷா ஓய்வு பெற்றார். இதே ஆண்டில்தான் வழக்கறிஞர் முனீருத்தீன் ஷரீப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு எந்தக் காரணமும் சொல்லப்படாமல் அவர் பெயரும் நீக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை ஒன்று என ஆனது. அந்த ஒருவர்தான் இப்போது பணியாற்றி வரும் நீதியரசர் எம். அக்பர் அலி அவர்கள். இன்னும் சில மாதங்களில் இவரும் ஓய்வு பெறக்கூடிய காலக்கட்டத்தில் இருப்பது கவலையளிக்கிறது.

2013ம் ஆண்டு இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான காலி இடத்தை நிரப்ப 12 புதிய நீதிபதிகள் பெயர் கொண்ட பட்டியலை உயர்நீதிமன்ற காலேஜியம் உச்சநீதிமன்ற காலேஜியத்திற்கு அனுப்பியது. (காலேஜியம் என்றால் தலைலை நீதிபதி ஒருவரும் இரண்டு மூத்த நீதிபதிகளும் இடம் பெறும் தேர்வு செய்யக்கூடிய குழு) இந்தப் பட்டியலில் மாவட்ட நீதிபதிகளின் ஒதுக்கீட்டிலிருந்து பணி உயர்வின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜபருல்லாஹ்கான் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளள.

இந்த பெயரை நியமனப்பட்டியலிருந்து எவரும் நீக்க முடியாது என்பது எல்லோரும் அறிந்திருக்கும் யதார்த்தம். காரணம் தகுதி அடிப்படையிலான பணி உயர்வு இது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் நீதியரசர் எம். அக்பர் அலி அவர்களின் இடத்தை இவர் பெறுவார் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியான இரண்டு முஸ்லிம் நீதிபதிகளுக்கான நியனம் எங்கே?

அண்மையில் வெளியிடப்பட்ட பட்டியலில் அப்துல் குத்தூஸ் என்பவர் வழக்கறிஞர்கள் மத்தியிலிருந்து எடுக்கப்பட்டவர் எனச் சொல்லி குறிப்பிட்டிருந்தார். இப்போது இவரின் பெயரும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஒரு மூத்த நீதிபதியின் மகனுக்கு நீதிபதி அந்தஸ்து வழங்குவதில்லை என்ற உச்சநீதிமன்ற காலேஜியய் எடுத்திருந்த முடிவின்படி அப்துல் குத்தூஸ் என்ற பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறதாம்.

முன்னாள் நீதியரசர் அப்துல் ஹாதி அவர்களின் மகன்தான் இவர். உச்சநீதிமன்ற காலேஜியத்தின் முடிவு என்று தெரிந்தும் உயர்நீதிமன்ற காலேஜியம் ஏன் இவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தேர்ந்தெடுத்துவிட்டு இந்த காரணத்தைச் சொல்லி ஏன் நீக்க வேண்டும்?

அப்படியானால் நீதிபதிகள் நியமனப் பட்டியலை வெளியிடுகிறபோது வேண்டுமென்றே அப்துல் குத்தூஸ் பெயரைப் போட்டுக் காண்பித்துவிட்டு எதையாவது சொல்லி இந்தப் பெயரை பிறகு பட்டியலிலிருந்து நீக்கிவிடலாம் என்கிற சதித்திட்டமா? கண்துடைப்புக்காக ஒரு முஸ்லிம் பெயரை அனுப்பி அது பிறகு நீக்கப்படட்டும் என்கிற கபட நாடகமா? இப்போது மட்டுமல்ல;

கடந்த சில ஆண்டுகளாக இது போன்று சில முஸ்லிம் பெயர்களை அனுப்புவதும், ஏதாவது காரணம் சொல்லி நீக்குவதும் வாடிக்கையாகிவிட்டது. பெயரை வெளியிடுவதற்கு முன்பு இந்த காரணங்களெல்லாம் நீதித்துறைக்குத் தெரியாதா? இப்போது அப்துல் குத்தூஸ் பெயர் நீக்கப்படுகிறதே! இவர் ஓய்வு பெற்ற நீதியரசர் அப்துல் ஹாதி அவர்களின் மகன் என்று முன்னரே தெரியாதா நீதித்துறைக்கு? என்ன பித்தலாட்டம் இது? யாரை ஏமாற்ற நினைக்கின்றனர்?

இப்படி அரங்கேற்றப்பட்ட கபட நாடகத்தின் இன்னொரு பின்னணி என்ன தெரியுமா? இந்த வழக்கறிஞர் அப்துல் குத்தூஸ் என்பவர் சுமார் 45 வயதுடையவர். இவர் இப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆக்கப்பட்டுவிட்டால் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் நிறைய ஆண்டுகள் இருப்பதால் பணிஉயர்வு அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் ஆக்கப்பட்டுவிடுவார். ஒரு முஸ்லிம் நீதிபதி உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதை இப்படித்தான் தடுக்க முடியும் என்றல்லவா செய்திருக்கிறார்கள்? இந்த உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ‘தினமணி’ நாளிதழ் ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களின் 19.1.2014 தேதியிட்ட ஆக்கம் பாராட்டுக்குரிய ஒன்று.

தகுதியானவர்கள் மாத்திரமே நீதிபதிகளாக நியனம் செய்யப்பட வேண்டும் என்பதில் நமக்கு வேறுபட்ட கருத்தில்லை. சிறுபான்மை முஸ்லிம் சமூக வழக்கறிஞர்களில் தகுதியானவர்களே இல்லையா? நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு காட்சி தருவது வெறுமனே எதையும் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்கல்ல;

நியாயத்தை வெளிப்படுத்துகிறபோது பாரபட்ச கண்கள் கொண்டு வேறு எதனையும் பார்க்கக்கூடாது என்பதற்காக. ஜனநாயக நாட்டில் நீதித்துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநாட்டு மக்களின் இறுதி நம்பிக்கையாக விளங்கும் கலங்கரை விளக்கு நீதித்துறைதான் தீர்வுகளுக்கான பயணத்தின் இறுதி இலக்கு. இது ஆட்டம் கண்டுவிடாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.

தற்போது பட்டியலில் காட்டப்பட்டிருக்கும் இரண்டு முஸ்லிம் பெயர்களுடன் மேலும் தகுதியான இரண்டு வழக்கறிஞர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்; சமூக நீதிக்கெதிரான செயல்களுக்குச் சாட்டையடி தரவேண்டிய நீதித்துறையாக நிமிர்ந்து நின்றிடல் வேண்டும்; நீதிமன்றங்களுக்கே புத்தி சொல்லித் தரவேண்டிய அவல நிலையை அகற்றிடல் வேண்டும்;

இதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லையானால் நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறியாக்கப்பட்டு விடுமே என்கிற அச்சஉணர்வு அவ்வப்போது நம்மை கவலையில் ஆழ்த்துகிறது. இந்த கவலை ஆட்சியானவர்களை ஆட்டங்காண வைக்கிற சமூகப் போராட்டமாக வெடித்து விடக்கூடாது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறோம். அதே நேரத்தில் சமூக நீதியை நிலைநாட்டுகிற வேள்வியில் நீதித்துறையுடன் நமது கரங்கள் இறுகப் பிடித்திருக்கும். இன்ஷா அல்லாஹ்.

சனி, 25 ஜனவரி, 2014

உ.பி. முஸஃப்பர்நகர் கலவரம் : சொந்த இருப்பிடம் திரும்ப முடியாதவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காலனி வீடுகள்


உத்தரபிரதேச மாநிலம் முஸஃப்பர் நகர் கல வரத்தில் பாதிக்கப்பட்டு இன்னமும் ஊர் திரும்ப முடியாமல் இருப்போ ருக்கு காலனி வீடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைத்துக் கொடுக்கிறது. நிவாரண குழுவினர் நேரில் சென்று மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளையும் செய்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் முஸஃப்பர் நகர் சாம்லி மாவட் டங்களில் 2013 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற கலவரங்களில் 60க்கும் மேற்பட்டோர் படு கொலை செய்யப்பட்டனர். எண்ணற்றோர் படுகாயமடைந் தனர்.

94 கிராமங்களிலிருந்து 42 ஆயிரம் பேர் சொத்து சுகங் களை விட்டுவிட்டு நிவாரண முகாம்களில் தங்கினர். அடிப்படை வசதி இல்லாமை, சுகாதாரக் குறைவால் இம் முகாம்களில் தங்கியிருந்த நூற்றுக் கணக்கானோர் உயிர் இழந்தனர். இதில் ஏராள மானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகாம்களில் தங்கியோ ருக்கு உ.பி.மாநிலஅரசு நிதி யுதவி அளித்து அவர்களை சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பச் செய்தது.

இவ்வாறு திரும்பியபோது சிலர் படுகொலை செய்யப் பட்டனர். இதனால் இன்னமும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பலர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தேசியத் தலைவர் இ.அஹமது பார்வை

முஸப்பர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான இ.அஹமது சாஹிப் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆறுதல் கூறி உடனடி உதவி களும் செய்ததோடு முதல்வர் அகிலேஷ் யாதவையும் சந்தித்து அவர்களுக்கு உதவியும் பாதுகாப்பும் அளிக்க நேரில் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிதி திரட்டியது.

இதனிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய பொருளாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி ஆகியோரின் ஆலோ சனையின்பேரில் நிவாரண குழுவினர் நிவாரண முகாம் களுக்கு சென்றனர்.

இக்குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர்கள் இ.டி.முஹமது பஷீர் எம்.பி., டெல்லி குர்ரம் அனீஸ் உமர், கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழ்நாடு மாநில பொது செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி தங்ஙள்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், யூத் லீக் தேசிய அமைப்பாளர் பி.கே.பெரோஸ், திருச்சூர் மாவட்ட தலைவர் நாஸர்., வைக்கம் செய்யது முஹம்மது,

உ.பி.மாநில பொதுச் செய லாளர் டாக்டர் மத்தீன்கான், செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது உவைஸ், மீரட் மாவட்ட செயலாளர் அன்ஜீம் அஸ்பாக், மீரட் முஹம்மது சாபீர்,

முஹம்மது இத்ரீஸ் உள்ளிட் டோர் இடம் பெற்றிருந்தனர்.


நேரில் உதவி
இக்குழுவினர் நேற்று (ஜன வரி 24) ஜும்ஆ தொழுகைக்கு காஜியாபாத் மாவட்டம் தோடி கிராமத்துக்கு சென்றனர். அங்குள்ள முகாமில் எந்த அடிப்படை வசதிகளும் இல் லாமல் அவதிப்படுவோருக்கு ஆறுதல் கூறி உணவு மற்றும் செலவிற்காக பொருளுதவியும் செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுஹைல், செய்யது அஹமது, நயீமா உள்ளிட்டோரின் முழு மருத்துவ செலவையும் மருத்துவ மனையில் செலுத்தி உதவி புரிந்தனர். தோடி பஞ்சாயத்து தலைவர் தாஹிர் உசைன், இளைஞரணி வசீம் மற்றும் தன்னார்வ தொண்டர்களை சந்தித்து நிரந்தர தீர்வு குறித்து ஆலோசனை செய்தனர்.

காஜியாபாத்திலிருந்து முஸப்பர் நகர் மாவட்டம் நக்லாராய் என்ற பகுதியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உருவாக்கப்படும் காலனிக் கான இடங்களை ஜாமிஆ ஆயிஷா சித்திக்காவின் பனாத் மற்றும் அல் புர்கான் பள்ளியின் தலைவர் முஹம்மது புர்கான் அஸதி உள்ளிட்டோர் சுற்றிக் காண்பித்து விளக்கினர்.

முஸப்பர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை சொந்தஇருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் இருக்கும் அப்பாவி மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காலனி வீடுகள் உருவாக் கப்பட இருக்கிறது. இக் காலனியில் பள்ளிவாசல், மதரஸா, மருந் தகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேசிய தலைவர் இ.அஹமதுவுடன் இ.யூ. முஸ்லிம் லீக் நிவாரண குழுவினர் டில்லியில் ஆலோ சனை செய்து வருகின்றனர்.

புதன், 22 ஜனவரி, 2014

ஏழரைகளுக்கு எதிர் கேள்வி, தரை தட்டிய கப்பல் என்றால் இரண்டரை பக்க விமர்சனம் எதற்கு? --மறைநேசன்

‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’ என்ற அமைப்பின் தலைமையகத் திலிருந்து வெளிவரும் ‘உணர்வு’ வார பத்திரிகையின்ஜனவரி 17-23, 2013 இதழின் 6,7,8 பக்கங் களில் ‘தரை தட்டிய பிறைக்கப்பல் கரை சேராது’ என்ற தலைப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றியும், திருச்சியில் 28.12.2013 அன்று நடைபெற்ற அதன் மாநாடு குறித்தும் கடுமையான சொற்களால் விமர்சித்திருப்பதோடு, இதன் தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை தரக்குறைவாக எழுதி விஷமத்தனமான படங்களையும் வெளியிட் டுள்ளார்கள்.

இத்தகைய அவதூறுகளால் முஸ்லிம் லீக் எந்த ஒரு பாதிப்பையும் அடைந்து விடப்போவதில்லை. காரணம் இந்த வரலாற்றுப் பேரியக்கத்தைப் பற்றி சமுதாயம் மிக நன்றாகஅறிந்து வைத்திருக்கிறது அதனால் தான் இதை சமுதாயப் பேரியக்கம் என்றே அழைக்கிறது.

ஆயினும் சமுதாயத்தின் கட்டமைப்பைவிட்டு விலகி நிற்கின்ற அந்த இயக்க இஞைர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அக்கட்டுரையின் விஷமத்தனங்களுக்கு பதில் சொல்ல ஒரு பக்கத்தை வீணாக்குகிறோம் - வாசகர்கள் மன்னிக்க வேண்டுகிறோம்.

" மஹல்லா ஜமாஅத்’’ என்றால் என்ன?

1906 டிசம்பர் 30 -ல் ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக், ‘முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்தல்; முஸ்லிம்களின் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துரைத்து வெற்றி காணச் செய்தல்; முஸ்லிம்களுக்கும் பிற சமய மக்களுக்குமிடையில் நட்புறவு வளர்த்தல்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி நிவர்த்திக்க செய்தல்’ என்பதை பிரதான நோக்கங்களாக அறிவித்தது.

இந்திய விடுதலைக்குப் பின் 1948 மார்ச் 10 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என இதனை மலரச் செய்த போது, ‘தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மையினர், தனித்தன்மைகளை காத்தல்’ என்பதை தனது லட்சியங்களாக அறிவித்தது.

கலாச்சார தனித்தன்மை என்பது நமது மார்க்கம்- மார்க்க அடிப்படையிலான பழக்க வழக்கங்கள் - காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் சமுதாய நடைமுறைகள் என்பனவே. மஹல்லா ஜமாஅத் என்பது அரபகத்தில் இருந்து வந்த வழிகாட்டலில் உருவானதே! அந்த கபீலா வழிகாட்டல் அடிப்படையில் தான் குடும்பம், குலம், கோத்திரம், என்றாகி பள்ளிவாசலை மையமாகக் கொண்டு மஹல்லா, முஹல்லம், ஜமாஅத்துகள் என உருவாயின. இந்த மஹல்லா ஜமாஅத்கள் இணைந்தது தான் முஸ்லிம் சமுதாயம் என்பது. மஹல்லா ஜமாஅத் அடிப்படையை தெரியாதவர்களும், சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை புரியாதவர்களும் தான் அதனை விமர்சிப்பார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு உரிமைகள் பெற்றுக் கொடுப்பதே முஸ்லிம் லீகின் லட்சியமாக இருந்தது அதன் மூலம் கிடைத்ததுதான் இடஒதுக்கீடு, விகிதாச்சார பிரதிநிதித்துவம்.

இந்திய சுதந்திரத்திற்குப்பின் கிடைத்த உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டதோடு முஸ்லிம்களின் வாழ்வுரிமையும் கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில் - முஸ்லிம் சமுதாயம், முஸ்லிம் சமுதாய தனித்தன்மைகளை காப்பதும், முஸ்லிம்களுக்கும் சகோதர சமுதாயங்களுக்குமுள்ள இடைவெளியை அகற்றவதும் முஸ்லிம் லீகின் பிரதான பணிகளாக அமைந்தன.

மஹல்லா ஜமாஅத்களில் நடத்தப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின விழாக்கள் இதற்கு பெரிதும் பயன்பட்டன. திராவிட இயக்கம் மீலாது விழா மேடைகளால் வளர்ந்தது என்பதும், அதற்கு முன்பு உருவான நீதிக்கட்சியின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கைக்கு வழிகாட்டியது முஸ்லிம் லீக் என்பதும் வரலாற்று உண்மைகள்.

முஸ்லிம் லீக் தலைவர்களின் மகத்தான தியாகத்தால் கிடைத்த நன்மைகள் தான் இறந்தவர்களை அடக்கம் செய்யும் உரிமை, ஊருக்கு உள்ளே கபரஸ்தான்களை காப்பாற்றியது, வக்ஃப் சொத்துக்களை வட்டியிலிருந்து பாதுகாத்தது போன்றவை என்பதும், மதமாற்ற தடைசட்டம், மதப்பிரச்சாரம் செய்வதற்கு லைசன்ஸ், கட்டாய குடும்ப கட்டுப்பாடு, அரசியலமைப்பு சட்டப்படி வாழாதவர்களுக்கு அபராதம் என கொண்டு வரப்பட்ட சட்டங்களை தடுத்து நொறுக்கியதும் முஸ்லிம் லீக் தலைவர்களின் மகத்தான தியாகத்தால் தான் என்பதும் இளைய தலைமுறைக்கு தெரியாத விஷயங்கள்.

ஆக முஸ்லிம்களின் நலன் காத்தல் என்பது முஸ்லிம் லீகின் உயர் மூச்சு. இதைப்பற்றியே சிந்திக்கின்ற இந்த பேரியக்கம், தனது எண்ணங்களையும் செயல் திட்டங்களையும் சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க மஹல்லா ஜமாஅத்களை பயன்படுத்துகிறது.

திருச்சி மாநாடு யாருக்கு எதிரானது ?

`உணர்வு’ உளறியிருப்பதை போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் திருச்சி மாநாடு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற ஒரு அமைப்பிற்கோ அல்லது வேறு எந்த ஒரு அமைப்பிற்கும் எதிராகவோ நடத்தப்பட்டதல்ல.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு தந்த யாரை இவர்கள் விமர்சிக்கின்றார்களோ அந்த கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக முதன்முறையாக பொறுப்பேற்ற போது தான் பிற்பட்டோர் நலக்குழுவை அமைத்தார். அந்த குழு 26.11.1970 -ல் அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் தமிழக முஸ்லிம்கள் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றனர். அந்த 1970 கால கட்டத்தில் சமூக விழிப்புணர்வை உண்டாக்க மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருச்சி மாநகரில் முதன்முதலில் கூட்டப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மஹல்லா ஐக்கிய ஜமாஅத், மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு, முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்கள் உருவாயின.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது பஞ்சாயத் ராஜ் சட்டம் கொண்டு வந்தார். இதன் மூலம் மஹல்லா ஜமாஅத் அமைப்புக்கு எத்தகைய பாதகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 1989 ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஷரீஅத் பஞ்சாயத்து கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திற்கும் சட்டதிட்டங்கள் உருவாக்க வேண்டும்; எல்லை வரையறுக்கப்பட வேண்டும்; பைத்துல்மால் உருவாக்கப்பட வேண்டும்; ஷரீஅத் பஞ்சாயத் அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது இந்த மாநாட்டில் தான்.

அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோ அல்லது அவர்களின் தாய் அமைப்பான தமுமுகவோ கருவில் மட்டுமல்ல - கனவில் கூட உருவாகியிருக்கவில்லை.

மதுரை மாநாட்டை தொடந்து மஹல்லா ஜமாஅத்தை முன்வைத்து பல்வேறு நிகழ்வுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தியது.

சென்னையில் 1-2-2009 அன்று நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள், உமராக்கள் மாநாட்டின் மூலம் தான் உலமாக்கள் பணியாளர் நல வாரியம் கிடைத்தது. 2010 டிசம்பர் 11 சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் முன்மாதிரி மஹல்லா ஜமாஅத்கள் 10 தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப் பட்டன.

திருச்சி மாநாட்டை மட்டும் எதிர்ப்பதேன்..?

இதேபோன்றுதான் 2013 டிசம்பர் 28 சனிக்கிழமை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தியது.

பள்ளிவாசல் கபரஸ்தான், பிறப்பு -இறப்பு, திருமணப்பதிவேடு பராமரிப்பு, மத்ரஸா, பள்ளிக்கூடம், பைத்துல்மால், ஷரீஅத் பஞ்சாயத், பெண்கள் உதவும் சங்கம், கல்வி வழிகாட்டல், மருத்துவ முகாம், ஏழைக்குமர் உதவி, மாணவர் கல்வி உதவி போன்றவற்றில் முன்மாதிரியாக செயல்படும் மஹல்லா ஜமாஅத்கள் 15 தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சமுதாயத்துக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் என்ன குறை? கண்டுவிட்டது உணர்வு?

திருச்சி மாநாட்டை மட்டும் """"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்"" விமர்சிக்க காரணம்......? இருக்கிறது! இதற்கு முன்பு நடத்தப்பட்ட மாநாடுகளில் தோழமை கட்சிகளின் தலைவர்கள், பிற சமய அறிஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வந்த கூட்டம் அவர்களுக்காக வந்ததே என பரப்புரை செய்தனர்.
இப்போது திருச்சி மாநாடு `அக்மார்க்’ முஸ்லிம் லீக் முத்திரையோடு துவக்கம் முதல் இறுதிவரை முஸ்லிம் லீகினர் மட்டுமே. திருச்சியில் திரண்ட பெரும் கூட்டத்தை சமுதாயமே வியந்து பார்த்தது - அனைவருமே பாராட்டி மகிழ்ந்தனர்.

இளம்பிறை எழுச்சிப் பேரணியில் அணிவகுத்த இளைஞர்கள், மாணவர்களை பார்த்து எங்கிருந்து வந்தது இந்த அபாபில் பறவைகள்? என ஆச்சரியப்பட்டனர். இது டிஎன்டிஜேவிற்கு பொறுக்கவில்லை.

முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு

2013 அக்டோபர் 5 சென்னையில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை மாநாட்டின் வெற்றியை பொறுக்க முடியாமல் உணர்வு அன்று """"குரைத்தது"" அதில் கலந்து கொண்ட இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் கேரள அமைச்சர் பி.கே.குஞ்ஞாலிகுட்டி மீது பாய்ந்து பிராண்டியது. பிறைமேடையில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

உணர்வு பாய்ந்ததற்கு காரணம்......
""முஸ்லிம்கள் நிரப்ப வேண்டியது சிறைச்சாலைகளை அல்ல; கல்விச் சாலைகள்; மதரஸாக்கள்; தொழிற்சாலைகள்; அரசு அலுவலகங்கள்"" என அம்மாநாட்டில் மாணவர்கள் எழுப்பிய முழக்கத்தால்தான்.

மாணவர்கள் இந்த முழக்கத்தை ஓங்கி ஒலித்தார்கள். இப்போது இருக்கும் இட ஒதுக்கீடு வாய்ப்பை நாம் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. காரணம்..... படித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாமை. வாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைமை; கல்வியில் இடை நிற்றல்; பெண்களுக்கு உயர்கல்வி இல்லாமை.

இந்தச் சூழ்நிலையில் படித்து பட்டம்பெற்று அரசு வேலை வாய்ப்புக்கு காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களையும், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையும் போராட்டக் களங்களுக்கு அழைத்து சிறையில் தள்ளினால் - அல்லது காலையில் கைது செய்து மாலையில் விடுதலை செய்தாலும் முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் பெயர் பதிவாகிவிட்டால் இவர்களின் எதிர்காலமும் அரசு வேலை கனவும் இருண்டு பாழாகிவிடும்.

எனவேதான், விழித்துக் கொண்ட இளைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த பரப்புரைக்கு பிறகுதான் த.த.ஜ.வின் சிறைநிரப்பும் போராட்டம் சிறை செல்லும் போராட்டமாக மாறியது.

முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு நடைபெற்று இரண்டே மாத இடைவெளியில் திருச்சியில் மாபெரும் மாநாடு. இந்த மாநாடு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு உணர்வு விமர்சனமே சாட்சி.

சமுதாய ஒற்றுமை பாவச்செயலா?
மக்களை ஈர்க்க அரசை எதிர்க்காமல் எங்களை எதிர்த்து மாநாடு நடத்தலாமா என த.த.ஜ கேட்கிறது.

அவர்களை எதிர்த்தோம் என்பதற்கு காரணமாக திருச்சி மாநாட்டின் முதல் தீர்மானத்தை அப்படியே வெளியிட்டுள்ளது -இதற்காக உணர்வுக்கு நன்றி கூறலாம். திருச்சி மாநாட்டில் சமுதாயத் தீர்மானங்களாக

1. சமுதாய ஒற்றுமை காப்போம் 2. மஹல்லா ஜமாஅத் வலிமை சேர்ப்போம் 3. பராமரிக்க முடியாமல் இருக்கும் பள்ளிவாசல் பராமரிப்புக்கு உதவி நிதியம் தொடங்குவோம் 4. தமிழக அரசாணை `1 அ’ படிவ அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி திருமண பதிவேடு தயாரிப்போம். 5. ஊர்கள்தோறும் மீலாது விழா நடத்துவோம் 6. சிறப்பு திருமண பதிவு சட்டம் (1954) கீழ் இஸ்லா மிய திருமணங்களை பதிவு செய்யாதீர் என சமுதாயத்திடம் எடுத் துரைப்போம் 7. காஜிகள், நாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம் களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுக் கொடுப்போம். 8. பள்ளிவாசல் பணிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்போம் 9. இமாம்களுக்கு தகுதியான ஊதியம் வழங்குவோம் என்று ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதல் தீர்மானமே தங்களுக்கு எதிரானது என்கிறது உணர்வு.

`சமுதாய ஒற்றுமை காப்போம்’ என்பது பாவச் செயலா?

ரமளான், ஹஜ்ஜுப் பெருநாள், தலை நோன்பு, ஸஹர், இஃப்தார் நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் ஒன்றுபட்டு செயல்படுவோம் என வேண்டுவது ஹராமான காரியமா? சமுதாயத்தில் பிளவுகள் ஏற்பட எவரும் காரணமாக இருக்க வேண்டாம் என வலியுறுத்துவது சமுதாய துரோகமா?

உணர்வின் விமர்சனத்தில் ஒரு உண்மை புரிந்து விட்டது.

சமுதாய ஒற்றுமை என்பது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்கு கூடாது. ஆகவேதான் அதை வலியுறுத்த வேண்டாம் என்கிறது.

மீதி 8 தீர்மானங்களில் `மீலாது விழா நடத்துவோம்’ என்பதை மட்டும்தான் த.த.ஜ. தங்கள் கொள்கைப்படி எதிர்க்க முடியும் - அதையும் இப்போது மாற்றி விட்டார்கள். ரபிய்யுல் அவ்வலில் நபிகளாரின் புகழ் பேசுவது கூடாது - ஆங்கில மாதத்தில் நடத்தினால் கூடும் என்பதே அவர்களின் புதிய ஏற்பாடு

திருச்சி மாநாட்டில் அரசியல் தீர்மானங்களாக,

1. நாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளுக்கு வேண்டுகோள் 2. மதவெறி சக்திகளை வீழ்த்த வாக்காளர்களுக்கு வேண்டுகோள் 3. பூரண மதுவிலக்கு 4. பொதுசிவில் சட்டத்தை கூறும் அரசியல் சட்ட 44-வது பிரிவை நீக்க வலியுறுத்தல் 5. மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த 6. தமிழகத்தில 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்த 7. இஸ்லாமாக மதம் மாறியோருக்கு பிற்பட்ட வகுப்பு சான்று 8. இந்தியாவில் இஸ்லாமிய வங்கி 9. பள்ளிவாசல் சான்றை ஏற்று பாஸ்போர்ட் 10. காஜி சட்டத்தில் திருத்தம் 11. ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் கூடாது 12. துணை வேந்தர் பதவிக்கு முஸ்லிம்கள் 13. நீதிபதிகளாக முஸ்லிம்கள் 14. திருச்சி ரயில்வே மேம்பாலம் 15. தோல், சாயப்பட்டறைகளுக்கு இழப்பீடு 16. ஆயுள் சிறைவாசிகள் விடுதலை 17. முஸ்லிம்களுக்கு இலவச கல்வி 18. நதிநீர் இணைப்பு என 18 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் எந்த தீர்மானம் சமுதாயத்திற்கு எதிரானது? எது மக்களை ஈர்க்காதது?

இப்படி மாநாடு நடந்தி தீர்மானம் போட்டால் தமிழகத்தில் முஸ்லிம் லீக் எப்போதோ சமாதியாகி விட்டது என உணர்வு எழுதுகிறது.

சமாதியாகி விட்டதால்தான் உடைப்பதற்கு த.த.ஜ. கடப்பாரை தூக்குகிறதா? - இறைநேசர்களின் கப்ருகளை உடைத்ததுபோல் உடைப்பதற்கு! சமாதியானவர்களை கண்டு கொள்வது த.த.ஜ.விற்கு ஹராமாயிற்றே. இதில் மட்டும் என்ன விதிவிலக்கு?

ஏகத்துவம் இவர்களின் ஏகபோக சொத்தா?
தவ்ஹீது ஜமாஅத் என பெயர் வைத்து விட்டால் ஏகத்துவம் இவர்களின் ஏகபோக சொத்தா?

அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு அவனது தூதரை பின்பற்றும் ஒவ்வொருவருமே ஏகத்துவவாதிகள்தான்!

ஆனால், அல்லாஹ்வை விவாதப் பொருளாக்கி அவனுக்கு உருவமுண்டா, இல்லையா என்ற தெருச்சண்டை வரையில் சர்ச்சைக்குள்ளாக்கிய இவர்கள் ஏகத்துவவாதிகள் என சொல்லப்படுவதற்கே அருகதை யற்றவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சாதாரண போஸ்ட்மேன் என்றதிலிருந்து - சத்திய ஸஹாபா பெருமக்களை `அண்ணன் எப்போ சாவான் - திண்ணை எப்போ காலியாகும்’ என காத்திருந்த வர்கள் என்று அவமானப்படுத்திய இவர்கள் மார்க்கம் பேசுவதற்கே தகுதியற்றவர்கள்.

பாரம்பரிய பள்ளிவாசலுக்கு அருகிலேயே வீட்டை வாடகைக்கு பிடித்து அதை தனிபள்ளியாக்கி போட்டி ஜமாஅத் ஏற்படுத்துகிறீர் களே என கேட்டால், அவர்கள் செய்யவில்லையா - இவர்கள் செய்யவில்லையா என கேட்கிறார்கள். த.த.ஜ.வை போல வேறு எவர்களாலும் சமுதாயத்திற்கு இவ்வளவு பெரிய சோதனைகள் ஏற்பட்டதில்லை.

எப்போதுமே தொப்பி அணிந்து கொண்டு, தொழும்போது மட்டும் தூக்கி எறிவது - ஜமாஅத்தின்போது முன்வரிசையில் நின்று கொண்டு இமாம் துஆ ஓதும்போது வெளிநடப்புச் செய்வது - ஜமாஅத் தொழுகையில் வேண்டுமென்றே தாமதமாக வந்து ஜமாஅத் முடிந்த மறுநிமிடமே போட்டி ஜமாஅத் வைப்பது போன்ற செய்கைகள் அதிகரித்தது. விரலை நீட்டவா - ஆட்டவா என்ற தகராறில் விரல்கள் ஒடிந்தன. பிறை பார்த்து நோன்புபிடித்த காலம் மாறி போலீஸ் குவிக்கப் பட்டதைப் பார்த்து இன்று தான் நோன்பு என அறிந்து கொள்ளும் துர்பாக்கியம் ஏற்பட்டது. இந்த இழிநிலைகளுக்குப் பிறகுதான் பள்ளிவாசல் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தன.

பள்ளிவாசலில் தொழ வருகின்றவர்களை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை உண்மைதான். ஆனால், தாங்கள் நினைப்பதை சாதிக்க ஜமாஅத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதையும், இமாம்களை புரோகிதர்கள் என்றும், தாதாக்கள் என்றும் விமர்சிப்பதும், அவர்களை தாக்குவதும், முத்தவல்லியை சுட்டுக் கொலை செய்வதும் எந்த நிர்வாகத்தால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்.

புற்றீசல்கள் போல் இயக்கம் பெருக யார் காரணம்?
``த.த.ஜ.வை எதிர்த்தால் பணக்காரர்கள் வாரி வழங்குவார்கள்; முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் முஸ்லிம் லீக் எதிர்ப்பதாக உணர்வு உளறியிருக்கிறது. இவர்களை ஆதரித்தோ, எதிர்த்தோ எந்தக் காலத்திலும் முஸ்லிம் லீக் அரசியல் நடத்தியதில்லை. தமிழகத்தில் இத்தனை இயக்கங் கள் உருவாக முஸ்லிம் லீக் காரணமாம் - முழு யானையை முக்காலிக்குள் மறைக்கப் பார்க்கிறது `உணர்வு’.

``முஸ்லிம்கள் நான்கு மத்ஹபுகளாக பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைக்கப் போகிறோம்’’ என புறப்பட்டு இயக்கம் கண்டவர்கள் நாற்பது இயக்கங் களாக சிதறுண்டு போனார்கள்.

அவர்களின் பிளவு கொள்கை வேறுபாட்டால் அல்ல - சுயநலம், பண விவகாரம் இன்னும் ஏட்டில் எழுதமுடியாத இருட்டு விவகாரங்களால்.

பாபரி மஸ்ஜிதை கட்டப் போகிறோம் என ஆரம்பித்து வாழ்வுரிமை போராட்டங்களின் பெயரால் வாரிச்சுருட்டிய கோடிகளுக்கு கணக்கு எங்கே என்று இவர்களின் பிளவுண்ட இயக்கங்கள் ஒன்றுக்கொன்று எழுதி வெளியிட்ட விவரங்களை கண்டு இணைய தளங்களே வெட் கப்பட்டன. கணினியே கலங்கி போனது, சுனாமியே தோற்கும் அளவுக்கு அவ்வளவு வாரிச்சுருட்டல் விவகாரங்கள்.

``மூன்று பெருநாட்கள் என பிறையை மூன்றாக்கியது அறிவியல் என்ற பெயரில் சில பைத்தியங்கள் தான்’ என இப்போது உணர்வு சொல்கிறது.

ஆனால் இந்த பைத்தியத்தை தொடங்கியது - பரவச் செய்தது யார்? இவர்களில்லையா?

இவர்கள் ஏற்படுத்திய பிறை குழப்பத்தாலும், பெருநாள் குழப்பத் தாலும் எத்தனை ஆயிரம் குடும்பங்களில் பிரச்சினைகள்; மாற்று சமுதாயங்கள் இதை பார்த்து சிரிப்பாய் சிரித்தன. இப்படிப்பட்டவர்களைத்தான் நிலையும் நிறமும் மாறாதவர்கள் என்று மக்கள் நற்சான்றளித்து இவர்களை ஆதரிக்கிறார்களாம் - கொட்டை எழுத்தில் உணர்வு கொக்கரிக்கிறது. இது உண்மை யென்றால் 75 லட்சம் தமிழக முஸ்லிம்களும் - ஏன் ஏழரை கோடி தமிழக மக்களும் இவர்கள் இயக்கத்திலல்லவா சேர்ந்திருப்பார்கள்.

கொச்சைப்படுத்தப்படும் போராட்டங்கள்
போராட்டங்களையே கொச்சைப்படுத்தக்கூடிய அளவில் காலையில் கூடி கல்யாண மண்டபத்தில் விருந்துண்டு மாலையில் வெளியேறுவோர்க்கு தியாகி பட்டமாம். போராட்டத்திற்கு ``பிரியாணி’’ அறிவிப்பும் அதே உணர்விலேயே இடம் பெற்றுள்ளது.

நபிவழி என்றால் அடிவயிற்றில் கல் இரண்டை கட்டிக் கொண்டு பசித்திருக்காமல், பிடிசோற்றில் படி நெய்யை கலந்து தயாரிக்கும் பிரியாணி எதற்கு? எந்த யுத்தத்தில் நபிகளார் (ஸல்) பெண்களை களமிறக்கினார்கள்? எது நபி வழி? பெற்றோர், கணவன் அனுமதியில்லாமல் போராட்டங்களுக்கு பெண்களை அழைத்து வருவதும், காட்சிப் பொருளாக அவர்களை களம் இறக்குவதும் அவர்கள் கைதானால் அன்னியர்களிடம் அங்க அடையாளங்களை காட்டுவதும் சமுதாயத்திற்கு கண்ணியமான செயலா?

ஒரு போராட்டமென்றால் களமிறங்கி கைதாகி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு சிறை செல்ல வேண்டும். தங்கள் லட்சியம் நிறைவேற ஜாமீனில் வெளிவரக்கூடாது. இதைவிட்டு விட்டு, ``ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் - போலீஸ் தடுத்தும் விடாப்பிடியாக ஜீப்பில் ஏறி, `நான் ஜெயிலுக்கு போரேன் - ஜெயிலுக்கு போரேன்’ - நானும் ரவுடி - நானும் ரவுடி - என்ற காட்சி அடிக்கடி தொலைக்காட்சியில் இடம் பெறுவதை பார்க்கும் போது இவர்கள் போராட்டம்தான் நினைவுக்கு வருகிறது.

ஆனாலும், இவர்கள் நடத்தும் போராட்டங்களை பற்றிய ஒரு உண்மையை உணர்வு பகிரங்கப்படுத்தியுள்ளது. ``நாங்கள் தவ்ஹீது வாதிகள் என தெரிந்தும் எங்கள் போராட்டங் களுக்கு மடை திறந்த வெள்ளமாய் படை எடுத்து வரும் கூட்டம் சுன்னத் ஜமாஅத்தினர்தான்’ என்று. இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது சுன்னத் ஜமாத்தினர் அல்ல - த.த.ஜ. காதலிக்கும் அ.இ.அ.தி.மு.க. தான்!

ஏனெனில் விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சையில் முதல்வர் ஜெயலலிதா ஒரு பேட்டியில், தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏழரை லட்சம் என சொன்னார். அது இவர்களைத்தான் சொன்னதாக நினைத்து வானத்துக்கும் -பூமிக்குமாக குதித்தனர்.

`75 லட்சம் தமிழக முஸ்லிம்களில் 10 சதவீதம் தவ்ஹீத்வாதிகள். 90 சதவீத சுன்னத் ஜமாஅத்தினர். அந்த வகையில் ஏழரை என முதல்வர் சொல்லியுள்ளார். தவ்ஹீத்வாதிகள் என்றால் த.த.ஜ. மட்டும் அல்ல’ என்ற விளக்கம் ஒருபுறத்திலிருந்து வந்தது.

ஆனால், அப்போது முதல்வரோடு கரம் கோர்த்து நின்ற இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் இதற்கு விளக்கம் சொல்லாமல் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டனர்.

ஆனால், எதையும் கணக்குப் போட்டுப் பார்க்கும் அம்மையார் ஏழரை என்றதற்கு அர்த்தம் உண்டு.

சகோதர இந்து சமயத்தவர்கள் சனியை இந்த எண் சொல்லிதான் அழைப்பார்கள். சனியிலும் கேடு கெட்ட சனியாக இருந்தால் ஏழரை என சொல்லக்கூட பயந்து `ஆறே முக்காலும் அரையும் காலும்’ என்பார்கள். அதுதான்இது. அதனால்தான் தலைப்பிலேயே இதை குறிப்பிட்டோம்.

மஹல்லாவாசிகள் விவாகரத்து, சொத்து சண்டைகளுக்காக இவர்களைத் தான் நாடி வருவதாக உணர்வு சொல்கிறது. ஆம்! கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்காகவே தமிழ்நாட்டில் பல இயக்கங்கள். இங்கு வரும் விவகாரங்கள் எல்லாம் இழுத்துக் கொண்டு ஓடியது அல்லது அழைத்துக் கொண்டு வந்தது.

மரத்தடி திருமணங்களுக்கும் - குடும்பத்தை கேவலப்படுத்தும் காரியங்களுக்காகவும் தானே மஹல்லா ஜமாஅத் வேண்டாம் என்கிறார்கள்.

டிசம்பர் 6 போராட்டத்துக்கு ``முத்தலாக்’’ ஏன்?:
பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் முஸ்லிம் லீக் வீரியம் இழந்து விட்டதாம். இந்த வீராதிவீரர்கள் சொல்கிறார்கள். 20 வருடங்களாக டிசம்பர் 6 போராட்ட களமாக்கினீர்களே என்ன ஆயிற்று. திடீரென இப்போராட்டத்திற்கு `முத்தலாக்’ கொடுத்து விட்டீர்களே ஏன்? இதற்கு மட்டும் முத்தலாக் கூடுமோ? அல்லது உண்டியல் குலுக்கியது போதுமோ? தனி மனித வழிபாடு அங்கா? இங்கா? ``அண்ணனை’’ எதிர்த்தவர்கள் மீளமுடியாத வழக்குகளில் சிக்க வைக்கப்படுவார்கள் என்பதுதான் இவர்கள் ஜனநாயகம்.

இவர்களின் தவறான வழிகாட்டல் எத்தனை பேரின் வாழ்வை தொலைத்தது. உள்ளே அனுப்பிய எவரையாவது இவர்கள் வெளியே எடுத்த வரலாறு உண்டா? இவர்கள் இயக்கம் கண்டபின் `அறுக்கப்பட்ட தாலி’கள் எத்தனை?

தரை தட்டிய பிறைக்கப்பல் கரை சேராதாம். தரை கட்டிய கப்பல் என்றால் உணர்வில் இரண்டரை பக்க விமர்சனம் எதற்கு?

தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாக மூன்று படங்கள்.. முட்டாள் தனமாக கேட்க வேண்டுமென்றால் இதுகுறித்து ``முபாகலாவிற்கு’’ தயாரா என்று! ஆனால் அது அவர்கள் பாணி. ஆனால், அநியாயமான குற்றச்சாட்டை நாங்கள் பலமுறை மறுத்தும் திரும்ப திரும்ப அவதூறு பரப்புவோர் பற்றி தஹஜ்ஜத் தொழுகையில் ஒரு முஸ்லிம் லீகன் கையேந்தி விட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. கோயபல்ஸ் பிரச்சாரம் போல் மீண்டும் மீண்டும் சொன்னால் சமுதாயம் நம்பி விடாது.

ஆசைகளுக்கும், ஆரவாரங்களுக்கும், ஆவேசங்களுக்கும் ஆட்படாத - அமைதியின் திருவுருவம், அடுத்தவருக்கு கேடு நினைக் காத அற்புத தலைவர் முனீருல் மில்லத்.கே.எம். காதர் மொகிதீன் இறைவனையும், இறைத்தூதரையும், இஸ்லாத்தையும் ஆய்வு செய்து அறிந்துள்ள பேராசிரியப் பெருந்தகை.

அந்த மாமனிதரை தரையிலிருந்து எழுவதை சாமியாரிடம் சரணாகதி என்பதையும், வகுப்பு கலவரத்தை தடுக்க இந்து முன்னணி கூட்டத்திற்கே நேரில் சென்ற துணிச்சல் மிக்கவரை வந்தே மாதரம் பாடச் சென்றார் என்பதும், இஸ்லாமிய கருத்துக் களை தன் சொற்பொழிவில் பரப்பி வந்த போது நடைபெற்ற நித்யானந்தா விழா புகைப்படத்தை இப்போது விஷமத்தன கருத் தோடு வெளியிடுவதையும் அல்லாஹ்வே மன்னிக்க மாட்டான்.

ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்...

இயக்கங்கள் எத்தனை தோன்றினாலும் சமுதாய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான்! மஹல்லா ஜமாஅத் அங்கீகாரமும், சமுதாய அரவணைப்பும் அதற்கே உண்டு. அதனால்தான் திறக்கப்படக்கூடிய பள்ளிவாசல் கள் முஸ்லிம் லீக் தலைவர்கள் இல்லாமல் திறக்கப்படுவ தில்லை; மத்ரஸா விழாக்கள் முஸ்லிம் லீக் தலைவர்களை அழைக்காமல் நடத்தப்படுவதில்லை.

27 ஆண்டு காலமாக திருக்குர்ஆன் விளக்கத்தையும், நபிகளாரின் பொன் மொழிகளையும், சமுதாய செய்திகளையும் தாங்கி வெளிவரும் சமுதாயத்தின் ஒரே நாளிதழான ``மணிச்சுடரை’’ யும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

சைத்தான் வேதம் ஓதுவதைப் போல் எளிமையைப் பற்றி இவர்கள் உபதேசித்துள்ளனர். ஜனவரி 28 இவர்கள் போராட்டத்திற்கு செலவழித்துள்ள விளம்பர செலவில் மட்டும் 1 பொறியியல் கல்லூரி அல்லது 2 கலைக்கல்லூரி அல்லது 6 பள்ளிக்கூடங்கள் அல்ல 10 மத்ரஸாக்கள் அல்லது 15 ஆதரவற்றோர் இல்லங்கள் என எழுப்பியிருக்கலாம்.

அ.இ.அ.தி.முக.விடம் பெருந்தொகை பெற பெருங்கூட்டம் திரட்ட இடஒதுக்கீட்டை இவர்கள் கையில் எடுத்திருப்பது சமுதாயத்திற்கு தெரியாத ரகசியமா? முஸ்லிம் லீக் இல்லை என்றால் இடஒதுக்கீடே இல்லை

முஸ்லிம் லீக் இல்லை என்றால் இடஒதுக்கீடு என்ற ஒன்றே இல்லை. இவர்கள் இப்போது கூப்பாடு போடும் 10 சதவீத மிஸ்ரா ஆணைய பரிந்துரையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாதனைதான்! விவரமறிய காயல் மகபூப் எழுதிய, `இடஒதுக்கீடு’ நூலை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.

இப்போதும் - எப்போதும் தெளிவாகச் சொல்கிறோம்.

மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு காப்பற்றப்பட வேண்டும்; மார்க்க விஷயங்களில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் வழிகாட்டு தலைத்தான் சமுதாயம் பின்பற்ற வேண்டும். இந்த கொள்கையில் உறுதியுள்ளவர்களை மட்டும் சமுதாயம் ஆதரிக்கட்டும்.